Last Updated : 04 Feb, 2020 10:13 PM

 

Published : 04 Feb 2020 10:13 PM
Last Updated : 04 Feb 2020 10:13 PM

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு: உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய மணிப்பூர் வழக்கின் விவரம் என்ன?

புதுடெல்லி

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல்வர் பழனிசாமி நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் 3 ஆண்டுகளாக நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்தார். இது தொடர்பாக திமுக தரப்பில் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மணிப்பூர் வழக்கைச் சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மணிப்பூர் மாநில வழக்கின் விவரம் என்ன என்பதைப் பார்க்கலாம்

மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 21 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதில் பாஜக, என்பிபி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ தோனோஜம் ஷியாம் குமார் பாஜகவில் சேர்ந்தார். அவரை ஏற்றுக்கொண்ட பாஜக, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியது. தற்போது தோனோஜம் ஷியாம் குமார் மணிப்பூரில் வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருக்கிறார்.

கட்சி மாறிய ஷியாம் குமார் எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி மனு அளித்தது. ஆனால், ஷியாம் குமாரைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் மறுத்துவிட்டார். இதையடுத்து, ஷியாம் குமாரைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏ பஜூர் ரஹ்மான், கே.மேகச்சந்திரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப். நாரிமன் தலைமையிலான அமர்வு முன் கடந்த மாதம் 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி நாரிமன் கூறுகையில், " இந்த விஷயத்தில் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமாகவும் செயல்பட வேண்டும். எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தகுதி நீக்கம் குறித்து சபாயநாகர் முடிவு எடுப்பதற்குப் பதிலாக, சுயாட்சி அதிகாரம் கொண்ட, நிலையான அமைப்பின் மூலம் முடிவு எடுக்கத் தகுதியான அமைப்பை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும்.

தகுதி நீக்கம் குறித்த மனுவைச் சபாநாயகர் காலவரையின்றி முடிவு செய்யாமல் அமர்ந்திருக்க முடியாது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், நியாயமான காரணங்களுக்குள் சபாநாயகர் தகுதி நீக்க மனு மீது முடிவு எடுக்க வேண்டும். அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும். ஆதலால் இந்த தகுதி நீக்க மனு மீது மணிப்பூர் சபாநாயகர் அடுத்த 4 வாரங்களுக்குள் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டிதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் ஏன் நடவடிக்கை எடுக்க தாமதித்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல், எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள், எப்படி எடுக்கப் போகிறீர்கள் என்பதைப் பதிலாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x