குஜராத் கலவரம்; பிரதமர் மோடிக்கு எஸ்ஐடி நற்சான்று அளித்ததற்கு எதிரான வழக்கில் ஏப்-14-ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்
Updated on
2 min read

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, பிரதமர் மோடி உள்ளிட்ட 59 பேருக்குத் தொடர்பில்லை என விடுவித்தது. இதை எதிர்த்து முன்னாள் எம்.பி. ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கு வரும் ஏப்ரல் 14-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்டது.

அப்போது குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாப்ரியும் கொல்லப்பட்டார். அதன்பின் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

அந்த சிறப்பு விசாரணைக் குழு கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், அப்போது முதல்வராக இருந்த மோடி, போலீஸ் அதிகாரிகள் பலர் உள்ளிட்ட 59 பேர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை எனத் தெரிவித்தது.

எஸ்டியின் அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மனுதாரர் ஜாகியா ஜாப்ரி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடி வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து 5 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

மனு தாரர் ஜாகியா ஜாப்ரி
மனு தாரர் ஜாகியா ஜாப்ரி

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, பொதுத் தேர்தலுக்குப் பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதற்கு மனுதாரரின் வழக்கறிஞர் கபில் சிபலும் சம்மதித்தார்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் வழக்கறிஞர் கபில் சிபல் வேறு ஒரு வழக்கில் ஆஜராகி இருந்ததால் அவருக்குப் பதிலாக வழக்கறிஞர் அபர்னா பாட் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, வழக்கறிஞர்களைப் பார்த்து, " இந்த வழக்கு பலமுறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எப்படியாகினும் இந்த வழக்கை விசாரிப்போம். ஒருநாள் குறித்துக் கொண்டு அந்த நாளில் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜராக வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அதற்கு மனுதாரரின் வழக்கறிஞர் அபர்னா பாட், "ஹோலி பண்டிகை முடிந்தபின் வழக்கை விசாரிக்கலாம்" எனத் தெரிவித்தார்.

குஜராத் அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சி.வைத்தியநாதன், மணிந்தர் சிங் , "இந்த வழக்கை ஒத்திவைப்பதால் தங்களுக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை. அதேசமயம் மற்ற மனுதாரர்களிடமும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஷ் வரி, இந்த வழக்கை வரும் ஏப்ரல் 14-ம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவிட்டனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in