Last Updated : 04 Feb, 2020 06:39 PM

 

Published : 04 Feb 2020 06:39 PM
Last Updated : 04 Feb 2020 06:39 PM

நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டிலும் டெல்லி தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி பேச்சு

நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டிலும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தத் தேர்தல் வரும் 10 ஆண்டுகளில் நடக்கும் முதல் தேர்தல் என்று டெல்லியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 8-ம் தேதி தேர்தலும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாகப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேபோல காங்கிரஸ், பாஜக கட்சிகளும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இன்னும் தேர்தலுக்கு 3 நாட்களே இருக்கும் நிலையில் துவாரகா பகுதியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது திரளாகப் பங்கேற்ற தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

''வரும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடக்கும் முதல் தேர்தல் டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல், நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டிலும் தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் வளர்ச்சி என்பது இந்தத் தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது.

வளர்ச்சித் திட்டங்களுக்குத் தடையும், வெறுப்பைப் பரப்பும் சூழல் இல்லாத அரசியல்தான் டெல்லி மக்களுக்குத் தேவை. குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது சுமத்தி எளிதாகத் திசை திருப்பும் அரசுக்கு மாறாக, மாநிலத்தை நல்ல திசையில் எடுத்துச் செல்லும் அரசுதான் டெல்லிக்குத் தேவை.

பாஜகவின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன் ஏராளமான மக்கள் கூடியிருப்பதைப் பார்த்து பலருக்குத் தூக்கம் பறிபோய்விட்டது. கிழக்கு டெல்லியிலும், துவாரகாவிலும் மக்கள் இருக்கும் கூட்டத்தால் மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெளிவாகிறது. எதிரிகள் எங்களைத் தாக்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் அரசு டெல்லிக்குத் தேவையில்லை.


டெல்லி மாநிலத்தின் மக்கள், விவசாயிகள், சாலையில் செல்வோர் அனைவரைப் பற்றியும் ஆம் ஆத்மி அரசு கவலைப்படவில்லை. டெல்லியில் வீடில்லாமல் வாழும் மக்களைப் பற்றி ஆம் ஆத்மி அரசு நினைத்துப் பார்த்துள்ளதா?

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடில்லா ஏழைகள் வீடு பெற ஆம் ஆத்மி கட்சி தடையாகவே இருந்து, அதற்கு அனுமதிக்கவில்லை. விவசாயிகள் என்ன தவறு செய்தார்கள்? பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் பலன் பெறாமல் அவர்களை ஏன் ஆம்ஆத்மி அரசு தடுத்தது?

டெல்லியில் 4-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நிறைவேற்ற மத்திய அரசு காத்திருக்கிறது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி அரசு அனுமதி வழங்க மறுக்கிறது.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லியில் செயல்படுத்த ஆம் ஆத்மி அரசு தடுத்துவிட்டு, மொஹல்லா கிளிக்னிஸ் திட்டத்தைச் செயல்படுத்தியது. நான் கேட்கிறேன், டெல்லி மக்கள் வெளி மாநிலம் சென்றால் இந்தத் திட்டத்தால் பயன் பெற முடியுமா?

இலங்கை மற்றும் அமெரிக்க மக்கள் தொகையைக் காட்டிலும், இந்தியாவில் வாழும் மக்களுக்கு வங்கிக் கணக்குகளை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். ஆனால், டெல்லி மக்கள் இதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய ராணுவத்தினரை அவமதித்தவர்களைத் தண்டிக்க, மக்கள் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x