

நாடு முழுதும் சிஏஏவுக்கு எதிரான போராட்டக்குரல்கள் இன்னும் அடங்காத நிலையில் லக்னோ பல்கலைக் கழகம் ஆர்டிஐ-அதாவது தகவலுரிமை விண்ணப்பதாரர்களிடம் குடியுரிமை சான்றாதாரங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.
ஆர்டிஐ விண்ணப்பதாரர்கள் தங்கள் குடியுரிமை சான்றாதாரங்களை காட்டாத வரையில் அவர்கள் கேட்கும் தகவலை அளிக்க மாட்டோம் என்று லக்னோ பல்கலைக் கழகம் தெரிவித்திருப்பது அடுத்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
அலோக் சாந்தியா என்ற ஆர்டிஐ விண்ணப்பதாரர் கேட்ட தகவலை அளிக்க மறுத்த லக்னோ பல்கலைக் கழகம் அவரது குடியுரிமை ஆதாரங்களைக் கேட்டது, அவர் பல்கலைக் கழக துணை வேந்தரிடம் புகார் அனுப்பியும் இவர் கேட்ட தகவல் கிடைத்தபாடில்லை.
“இது பெரிய திர்ச்சி, ஆர்டிஐ சட்டத்தை பல்கலைக் கழகம் தன் சொந்த லாபங்களுக்காக திரித்துள்ளது. இவ்வாறு கேட்க இவர்களுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை” என்று சாந்தியா என்ற இந்த ஆர்டிஐ விண்ணப்பதாரர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
சாந்தியா, சுயநிதிக் கல்வித்திட்டங்களுக்கான ஆசிரியர்கள் நியமனம் மற்றும் சம்பளம் குறித்த விவரங்கள் தேவை என்று தகவலுரிமைச் சட்டத்தின் கீழ் வினா எழுப்பியிருந்தார்.
“சில விண்ணப்பதாரர்கள் ஆர்டிஐ விதிமுறைகளை அறியாமல் குடியுரிமைச் சான்றுகளைக் காட்டி தகவல்களைப் பெற்றிருக்கலாம், ஆனால் அந்த விதியற்ற விதியே நடைமுறையாக முடியாது” என்கிறார் சாந்தியா.
பல்கலைக் கழகம் இது குறித்துக் கூறும்போது ஆர்டிஐ விண்ணப்பதாரர்களிடன் குடியுரிமை ஆதாரம் கேட்கும் பழக்கம் சில ஆண்டுகளாக இருந்து வருவதாகத் தெரிவித்தது.