

சீனாவிலிருந்து ஹைதராபாத் திரும்பிய 19 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைத்து கரோனா மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெலங்கானா சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சிட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பொறியாளர்கள், பயிற்சிக்காக சீனாவில் உள்ள வூஹான் நகரத்துக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு தனி விமானம் அனுப்பியது. இதன் மூலம் சிட்டியில் இருந்து பயிற்சிக்கு சென்றவர்களில் 4 பேர் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தனர்.
இவர்கள் திருப்பதியில் உள்ள ருய்யா அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு அங்குள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, ஹைதராபாத் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 14 நாள் கண்காணிப்புக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை மையத்தை அம்மாநில சுகாதார அமைச்சர் ஈடல ராஜேந்தர் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “சீனாவுக்கு பணி நிமித்தம் சென்ற நமது நாட்டினருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க நாட்டில் 17 கரோனா பரிசோதனை மையங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஹைதராபாத்தில் இம்மையம் தொடங்கப்பட்டது. இங்கு தற்போது சீனாவில் இருந்து திரும்பிய 19 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 7 பேருக்கும் ரத்தப் பரிசோதனை செய்து இறுதி மருத்துவ அறிக்கை வெளியானதும் தகவல் தெரிவிக்கப்படும். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” என்றார்.
சீனாவில் சிக்கிய ஆந்திர மணப்பெண்
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீ சிட்டியில் உள்ள டிசிஎல் நிறுவனம் மூலம் சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் உள்ள அதே நிறுவனத்தில் பயிற்சிக்கு சென்றவர் ஜோதி. ஆந்திர பொறியாளரான இவருக்கு வரும் 18-ம் தேதி திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.இந்நிலையில் இவரது வீட்டில் தற்போது திருமண களை காணாமல் போயுள்ளது. வூஹானில் பரவி வரும் கரோனா வைரஸால் தங்களது மகளுக்கு ஏதும் ஆகி விடக்கூடாது என ஜோதியின் பெற்றோர் கோயில், கோயிலாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜோதி தன்னை விரைவில் வூஹானிலிருந்து இந்தியா அழைத்துச் சென்று, மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே திருமணம் நடக்கும். மேலும் இவர் 14 நாள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதால் திட்டமிட்டபடி திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இவருடன் பணியாற்றும் ஆந்திராவை சேர்ந்த சத்யசாய் கிருஷ்ணா என்பவரும் வூஹானில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.