Last Updated : 03 Feb, 2020 06:07 PM

 

Published : 03 Feb 2020 06:07 PM
Last Updated : 03 Feb 2020 06:07 PM

டெல்லி தேர்தல் தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும்; தேர்தல் அறிக்கையை கேஜ்ரிவால் ஏன் நீக்கினார்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி மக்களின் வாக்குதான் நாட்டில் மாற்றம் ஏற்பட ஆதரவாக இருந்தது, இப்போது இந்த தேர்தலில் டெல்லி மக்களின் வாக்குதான் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்து டெல்லியை நவீனமாக்கப் போகிறது என்று பிரதமர் மோடி டெல்லியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 8-ம் தேதி தேர்தலும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாகப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேபோல காங்கிரஸ், பாஜக கட்சிகளும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

டெல்லியில் உள்ள கர்கர்டோமா பகுதியில் இன்று பாஜக சார்பில் தேர்தல் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்குக் கூடியிருந்த ஏராளமான தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

டெல்லியில் உள்ள மக்களின் வாக்கு மற்றும் ஆதரவில்தான் நாட்டில் மாற்றம் ஏற்பட்டது, இப்போது டெல்லி தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும், நவீனத்தையும் ஏற்படுத்தும். மக்களின் வாழ்க்கை முறையை எளிமையாக்கும். டெல்லியில் நடக்கும் தேர்தல் தேசத்தின் தலைவிதியை மாற்றும்.

ஏழை மக்கள் தங்கள் வாழ்நாளில் சொந்த வீடு வாங்கமுடியுமா என்று நினைத்த நிலையில் அவர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறோம். வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் அமைத்துத் தரப்படும்.

நூற்றாண்டுகளாக நாட்டை பாதித்து வந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் எங்களுடைய அரசு தீர்வு கண்டுள்ளது. டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியுள்ளது. நாங்கள் அளித்த வாக்குறுதியின்படி டெல்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத பகுதியில் வாழும் மக்கள் முறைப்படுத்தப்பட்டுச் சரியான இடத்தில் குடியமர்த்தப்படுவார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், 70 ஆண்டுகளாக நீடித்துவந்த காஷ்மீர் 370 பிரிவு நீக்கப்பட்டுள்ளது, ராமஜென்மபூமி விவகாரத்தில் 70 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு வந்துள்ளது, கர்தார்பூர் சாஹேப் வழிப்பாதை 70 ஆண்டுகளுக்குப்பின் திறக்கப்பட்டுள்ளது, இந்தியா வங்கதேச எல்லைப்பிரச்சினை 70 ஆண்டுகளுக்குப்பின் தீர்க்கப்பட்டுள்ளது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் 70 ஆண்டுகளுக்குப்பின் வந்துள்ளது, போர் நினைவுச் சின்னம்,போலீஸ் நினைவுச் சின்னம் ஆகியவை 60 ஆண்டுகளுக்குப்பின் வந்துள்ளது

நாட்டின் சாதகமான நலன்தான் எங்களுக்கு முக்கியம், நேர்மறையான எண்ணங்கள் மீதுதான் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்.

டெல்லியில் உள்ள ஆம்ஆத்மி அரசு, இங்கு மத்திய அரசின் பிரதான் மந்திரிஆவாஸ் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. டெல்லியில் ஆட்சியில் இந்த அரசு இருக்கும் வரை, நலத்திட்டங்களுக்குத் தடையாகவே இருப்பார்கள். அரசியல் செய்வதைத் தவிர இவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

கடந்த 21-நாட்களுக்குமுன் ஆம் ஆத்மி கட்சி தங்களின் இணையதளத்தில் இருந்து கடந்த தேர்தல் அறிக்கையை நீக்கியது. கடந்த தேர்தலில் என்ன மாதிரியான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன, அதில் எத்தனை நிறைவேற்றப்பட்டன என்பது மக்கள் அறிந்துகொள்வார்கள் என்பதால் அதை அரவிந்த் கேஜ்ரிவால் கட்சி நீக்கிவிட்டது.

வரும் 8ம்தேதி நடக்கும் தேர்தல் டெல்லியில் புதிய அரசை அமைக்கும் விஷயம் மட்டுமல்ல, இந்த 10 ஆண்டுகளில் டெல்லியின் வளர்ச்சியை, மேம்பாட்டை உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகும்.

இந்த தேசத்து மக்களுக்கு லோக்பால் அமைப்பு கிடைத்துவிட்டது, ஆனால், டெல்லியில் வாழும் மக்களுக்கு இன்னும் லோக்பால் கிடைக்கவில்லை. இந்த பட்ஜெட் இந்த ஆண்டுக்கு மட்டும் வழிகாட்டியாக இல்லை, இந்த 10 ஆண்டுகளுக்கும் வழிகாட்டியாக இருக்கும். இந்த பட்ஜெட் டெல்லியில் உள்ள இளைஞர்கள், வர்த்தகர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள், பெண்கள் ஆகியோருக்கு நலம் விளைவிக்கும் விதத்தில் இருக்கும்.

துல்லியத் தாக்குதலின் போது நம்முடைய படைகளின் திறமையின் மீது சந்தேகப்பட்டார்கள். அதுபோன்ற கட்சிதான் டெல்லியில் மீண்டும் ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். டெல்லியில் நடக்கும் அனைத்துப் போராட்டங்களுக்கு பின்புலத்தில் அரசியல் வடிவம் இருக்கிறது
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x