அனந்த குமார் ஹெக்டே கருத்துக்குத் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்க; பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யவேண்டும். பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பெங்களூருவில் சனிக்கிழமை ஒரு பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் உத்தர கண்டன தொகுதி பாஜக எம்.பி.யுமான அனந்தகுமார் ஹெக்டே பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், "மகாத்மா காந்தியை எவ்வாறு மகாத்மா என்று அழைக்கிறார்கள். அவர் நடத்திய சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம். ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டம் முழுவதுமே, ஆங்கிலேயர்களின் அனுமதியுடன், ஆதரவுடன் நடத்தப்பட்டது. தலைவர்கள் என அழைக்கப்படக் கூடியவர்கள் யாரேனும் போலீஸாரால் ஒருமுறையாவது தாக்கப்பட்டு இருக்கிறார்களா?" எனத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான அனந்த சர்மா கூறுகையில், "நாட்டுக்காக ஏராளமான தியாகங்களைச் செய்தவர்களையும், சுதந்திரப் போராட்ட இயக்கத்தையும் பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே இழிவுபடுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை பாஜக அரசும், பிரதமர் மோடியும் கொண்டாடுவது உண்மையாக இருந்தால், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வந்து தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்.
அனந்தகுமார் ஹெக்டே பேச்சுக்கு மோடி மன்னிப்பு கோர வேண்டும். அனந்தகுமார் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விடுத்த அறிக்கையில், "விடுதலைப்போராட்ட இயக்கத்தை நாடகம் என்று பாஜக விமர்சித்துள்ளது. அவர்கள் சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை, எந்தவித தியாகங்களையும் செய்யவில்லை. இதுபோன்ற அறிக்கைகள் அவர்களின் உண்மையான மனநிலையை வெளிப்படுத்துகிறது. காந்தியின் பெயரை ஒரு வெளித்தோற்றத்துக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள், அவர் மீது மரியாதை இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறுகையில், "மகாத்மா காந்தியைத் தொடர்ந்து விமர்சித்து வரும் பிரக்யா தாக்கூர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் பிரதமர் மோடி எடுக்கவில்லை. அப்போது அனந்தகுமார் ஹெக்டே இதேபோன்று மகாத்மா காந்தியைப் பேசியுள்ளார். விளம்பரங்களில் மட்டும்தான் பிரதமர் மோடி காந்தியை விரும்புகிறாரா, காந்தியை வெறுக்கும் கோஷம் மூலம் தங்களின் தொண்டர்களை ஒன்றிணைக்கப் பயன்படுத்துகிறார்கள்.
மகாத்மா காந்தி மீது சிறிதளவு மரியாதை இருந்தால், தாக்கூரையும், ஹெக்டேவையும் பிரதமர் மோடி கட்சியில் இருந்து நீக்க வேண்டும். கோட்சே விஸ்வாசமாக இருக்கிறாரா அல்லது காந்தி விஸ்வாசமாக இருக்கிறாரா என்பதைப் பிரதமர் மோடி வெளிப்படுத்த வேண்டிய நேரம்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் கூறுகையில், "அனந்தகுமார் ஒருவேளை தனது குருநாதரின் மனநிலையை வெளிப்படுத்தி இருக்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால், அவரின் கருத்துக்கு அவர் சார்ந்திருக்கும் கட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்து, நாட்டில் மிகப்பெரிய மாற்றம் உருவாகப் பணியாற்றியவர்கள் வரலாற்றின் இருளான பக்கத்தில் அடைக்கப்பட்டுவிட்டார்கள். ஆனால், ஆங்கிலேயர்களிடம் முகஸ்துதி செய்து பிழைத்தவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் எனச் சான்று பெறுகிறார்கள். இது நாட்டின் துயரம்" எனத் தெரிவித்துள்ளார்.
