

கடந்த 2019, செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.7.27 லட்சம் கோடியாக இருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி நேரத்தில் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், குறிப்பிட்ட சில நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் நடந்த மோசடியின் பண மதிப்பு மட்டும் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 374 கோடியாகும்.
பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு ரிசர்வ் வங்கி அளித்த கடந்த 2019, செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி ரூ.7.27 லட்சம் கோடியாக இருக்கிறது.
தேக்கமடைந்த சொத்துகள் வாராக் கடன் அளவு ரிசர்வ் வங்கி அளித்த விவரங்கள்படி கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 31-ல் ரூ.2,79,016 லட்சம் கோடியாக இருந்தது. 2017-ம் ஆண்டு மார்ச் 31-ல் ரூ.6,84,732 கோடியாக அதிகரித்தது. 2018, மார்ச் 31-ல் இது ரூ.8,95,601 கோடியாக அதிகரித்தது.
ஆனால், மத்திய அரசு வங்கிகளுக்கு மறுமுதலீடு அளித்தது, சீர்திருத்த நடவடிக்கைகள் செய்தது போன்றவற்றால் ரூ.1.68,305 கோடி குறைந்து, தற்போது 2019, செப்டம்பர் 31-ம் தேதி நிலவரப்படி ரூ.7,27, 296 கோடியாக இருக்கிறது.
குறிப்பிட்ட இடைவெளியில் வங்கிகள் வாராக்கடன் குறித்தும், மோசடிகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கையை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வருகின்றன.
கடந்த 2016-17 aaம் ஆண்டில் ரூ.41,167 கோடியும், 2018-19 aaம் ஆண்டில் ரூ.71,543 கோடியும் பட்டியலிடப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மோசடி நடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் மோசடிகளின் மதிப்பு ரூ.1,13,374 கோடியாக அதிகரித்துள்ளது".
இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.