

மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம் என்று பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அனந்தகுமார் ஹெக்டேவின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள பாஜக தலைமையும், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெங்களூருவில் சனிக்கிழமை ஒரு பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் உத்தர கண்டன தொகுதி பாஜக எம்.பி.யுமான அனந்தகுமார் ஹெக்டே பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், "மகாத்மா காந்தியை எவ்வாறு மகாத்மா என்று அழைக்கிறார்கள். அவர் நடத்திய சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம். ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டம் முழுவதுமே, ஆங்கிலேயர்களின் அனுமதியுடன், ஆதரவுடன் நடத்தப்பட்டது. தலைவர்கள் என அழைக்கப்படக் கூடியவர்கள் யாரேனும் போலீஸாரால் ஒருமுறையாவது தாக்கப்பட்டு இருக்கிறார்களா? அவர்களின் சுதந்திரப் போராட்டம் மிகப்பெரிய நாடகம்.
அது உண்மையான போராட்டம் கிடையாது. தலைவர்கள் சத்யாகிரகம் செய்துதான், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்துதான் சுதந்திரத்தை நாட்டுக்காகப் பெற்றுக்கொடுத்தார்கள் என்று காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். சத்யாகிரகத்தால் ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டுச் செல்லவில்லை. வெறுப்பினால் இந்தியாவுக்குச் சுதந்திரம் அளித்து ஆங்கிலேயர் சென்றார்கள். வரலாற்றைப் படிக்கும்போது என் ரத்தம் கொதிக்கிறது. எப்படி தேசத்தின் மகாத்மா எனும் அளவுக்கு உயர்ந்தார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
பாஜக. எம்.பி. ஹெக்டே பேசிய பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் ட்விட்டரில் கூறுகையில், "ஆங்கிலேயர்களுக்கு முகஸ்துதி செய்தவர்கள், உளவு பார்த்தவர்கள் மகாத்மா காந்திக்குச் சான்றிதழ் தரத் தேவையில்லை. பாஜகவை நாதுராம் கோட்சே கட்சி என்று பெயர் மாற்றுங்கள்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே பேசிய பேச்சால் பாஜக தலைமையே கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனந்தகுமார் ஹெக்டே மகாத்மா காந்தி குறித்துப் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக தலைமை விரும்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.