

மாநிலங்களவை இன்று தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர் ஆகிய விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து சிஏஏ, என்பிஆர் விவகாரங்களை விவாதிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அனுமதி மறுத்ததால் அவையில் கூச்சல் ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, அவை இன்று காலை தொடங்கியதும், ஓமன் நாட்டின் மன்னர் குவாபூஸ் பின் சயத் அல் சயத் மறைவுக்கும், ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 29 பேர் உயிரிழந்ததற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், " காங்கிரஸ் எம்.பி. குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஓ பிரையன், இந்தியக் கம்யூனிஸ்ட் எம்.பி. பினாய் விஸ்வம் ஆகியோர் விதி 267-ன் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து, என்பிஆர், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்கள்.
பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் நோட்டீஸ் அளித்துள்ளார். ஆனால், அதற்கு முன்பாக, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும்'' என்றார்.
இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முதலில் என்பிஆர், சிஏஏ விவகாரங்களை முதலில் வாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்குப் பதில் அளித்த வெங்கய்ய நாயுடு, அவையின் உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நான் விவாதிக்க நேரம் அளிக்கிறேன். குடியரசுத் தலைவரும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்துப் பேசியுள்ளார். ஆதலால் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதிப்போம் எனத் தெரிவித்தார்
ஆனால், பகுஜன் சமாஜ் எம்.பி. சந்திர மிஸ்ரா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஓ பிரையன், மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் ஆகியோர் எழுந்து பேச முற்பட்டனர்.
அப்போது பேசிய வெங்கய்ய நாயுடு," ஒத்திவைப்பு தீர்மானம் நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது தொடர்ந்து உறுப்பினர்கள் பேச அனுமதிக்க முடியாது'' என்று தெரிவித்தார்.
ஆனால் எம்.பி.க்கள் தொடர்ந்து பேசி அமளியில் ஈடுபட்டதால், அவையைப் பிற்பகல் வரை வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார்.