

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 8-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநில தலைவர் சுபாஷ் சோப்ரா நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், யுவ ஸ்வாபிமான் திட்டத்தின் கீழ் வேலையில்லாத இளநிலை பட்டதாரிகளுக்கு ரூ.5 ஆயிரமும், முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ.7,500-ம் மாதாந்திர நிதியுதவி வழங்கப்படும். வீடுகளுக்கு மாதத்துக்கு தலா 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். மாசை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் ஒவ்வாரு ஆண்டும் பட்ஜெட் தொகையில் 25 சதவீதம் ஒதுக்கப்படும்.
மாநகரம் முழுவதும் 100 இந்திரா உணவகங்கள் நிறுவப்படும். இவற்றில் ரூ.15-க்கு சாப்பாடு வழங்கப்படும். சேமிப்பை வலியுறுத்தும் வகையில், மின்சாரம் மற்றும் தண்ணீர், விநியோகத்தில் பணம் திரும்பப் பெறும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ