Published : 03 Feb 2020 07:44 AM
Last Updated : 03 Feb 2020 07:44 AM

ஒலி மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை; சிக்னலில் ‘ஹாரன்’ அடித்தால் காத்திருப்பு நேரம் அதிகரிக்கும்: மும்பையில் புதிய முறையை அறிமுகம் செய்தது காவல் துறை

மும்பை

சாலை சிக்னல்களில் சிகப்பு விளக்கு எரியும்போது ‘ஹாரன்' அடித்தால், வாகன ஓட்டிகள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் மும்பையில் ஏற்பட்டுள்ளது.

ஒலி மாசைக் கட்டுப்படுத்துவதற்காக மும்பை காவல்துறை எடுத்துள்ள இந்த புதிய நடவடிக்கைக்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்தியாவின் வர்த்தக தலைநகராக மும்பை விளங்குகிறது. ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நிரம்பியிருப்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை மும்பை நிறைவேற்றி வருகிறது. பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மும்பையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் இட நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்சினைகள் மும்பையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, வாகன நெரிசல் என்பது மும்பையின் தவிர்க்க முடியாத ஓர் அடையாளமாகவே மாறிவிட்டது. 4 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும் என்றால் கூட குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் ஆகிவிடும் என்ற நிலைமையில்தான் மும்பைவாசிகள் இயங்கி வருகின்றனர்.

2019-ம் ஆண்டில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் உலக அளவில் 4-வது இடத்தில் மும்பை உள்ளதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் மும்பை முதலிடத்தில் இருந்திருக்கிறது.

அதிகரிக்கும் ஒலி மாசு

வாகன நெரிசலால் மும்பையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. டெல்லிக்கு அடுத்தப்படியாக மும்பையில்தான் காற்று மாசு அதிக அளவில் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, வாகனங்கள் எழுப்பும் ‘ஹாரன்' சத்தத்தால் ஒலி மாசு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

அதாவது, மனிதனின் செவிக்கும், மூளைக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு 85 டெசிபலுக்கு மிகாமல் ஒலி இருக்க வேண்டும். ஆனால், தற்போது மும்பையில் மேற்குறிப்பிட்ட டெசிபலுக்கும் அதிகமாக ஒலி அளவு இருக்கிறது.

இந்த ஒலி மாசால் மும்பை மக்களின் உடல் மற்றும் மனநிலையில் கணிசமான அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, முதியவர்கள், இதய நோயாளிகள், குழந்தைகள் இதனால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்த ஒலி மாசைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா அரசும், மும்பை போலீஸாரும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தும் கூட எதுவும் பலனளிக்கவில்லை.

சிக்னலுடன் டெசிபல் மீட்டர்

இந்நிலையில், இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் விதமாக ஒரு புதிய நடவடிக்கையை மும்பை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, மும்பை நகரில் உள்ள முக்கியமான சிக்னல்களில் சில நாட்களுக்கு முன்பு டெசிபல் மீட்டர்கள் பொருத்தப்பட்டன.

சிகப்பு நிற சிக்னல் இருக்கும்போது ‘ஹாரன்' ஒலி அளவு 85 டெசிபலுக்கு அதிகமாக சென்றால், சிக்னல் பச்சை நிறத்துக்கு மாறாது. அதற்கு பதிலாக, சிகப்பு சிக்னலில் மீண்டும் முதலில் இருந்து ‘கவுன்ட் டவுன்' தொடங்கும். இதனால், வாகன ஓட்டிகள் கூடுதல் நேரம் சிக்னலில் காத்திருக்க வேண்டி வரும்.

இந்த புதிய நடைமுறை அமலான சில நாட்களிலேயே, சிக்னல்களில் ‘ஹாரன்' ஒலியின் அளவு கணிசமாக குறைந்துவிட்டதாக மும்பைவாசிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறையை மும்பை முழுவதும் விரிவுபடுத்த காவல்துறை தயாராகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x