

நிர்பயா குற்றவாளிகளுக்கு தனித்தனியாக மரண தண்டனையை நிறைவேற்றலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2012 டிசம்பர் 16-ம் தேதி டெல்லியில் பிஸியோதெரபி மாணவி, 6 பேர் கும்பலால் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் 13 நாட்களுக்குப் பிறகு சிங்கப்பூர் மருத்துவமனையில் டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ராம் சிங் என்பவர் டெல்லி திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு குற்றவாளி, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 2015 டிசம்பரில் விடுதலையானார்.
வினய் சர்மா சர்மா, அக்சய் சிங், முகேஷ் குமார் சிங், பவன் குப்தா ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் கடந்த 2013 செப்டம்பரில் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டிலும் உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டிலும் உறுதி செய்தன.
நான்கு பேருக்கும் கடந்த 1-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே வினய் குமார் சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. இதை காரணம் காட்டி மரண தண்டனையை தள்ளி வைக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மறுஆணை பிறப்பிக்கப்படும் வரை நிர்பயா குற்றவாளிகளின் மரண தண்டனை ஒத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டார்.
வினய் குமார் சர்மா, முகேஷ் குமார் சிங் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இதைத் தொடர்ந்து மரண தண்டனையை நிறுத்திவைக்கும் டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி சுரேஷ் கெய்த் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அவர் கூறும்போது, நிர்பயா குற்றவாளிகளுக்கு தனித்தனியாக மரண தண்டனையை நிறைவேற்றலாம். குற்றவாளிகள் திட்டமிட்டு காய் நகர்த்துகின்றனர். இது நாட்டு மக்களின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது" என்று தெரிவித்தார்.
குற்றவாளிகள் சார்பில் ஏ.பி.சிங், ரெபேக்கா ஜான் ஆகியோர் வாதாடினர். அவர்கள் கூறும்போது, "மரண தண்டனை கைதிகளாக இருந்தாலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது. சட்ட விதிகளின்படியே நடக்க வேண்டும்" என்று வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ் கெய்த், தீர்ப்பை ஒத்திவைத்தார்.