Last Updated : 02 Feb, 2020 02:32 PM

 

Published : 02 Feb 2020 02:32 PM
Last Updated : 02 Feb 2020 02:32 PM

அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறை: நடப்பு நிதியாண்டில் முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்த மத்திய அரசு

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கைக் காட்டிலும் அதிகரித்துள்ளதால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடப்பு நிதியாண்டில் முக்கியத் திட்டங்களுக்கு நிதியைக் குறைத்துள்ளது.

குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனைத் திட்டங்களாக இருக்கும் தூய்மை இந்தியா திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் (சுகாதாரக் காப்பீடு), தேசிய கங்கா திட்டம், விவசாயிகளுக்கு உதவித்தொகை அளிக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு நடப்பு நிதியாண்டில் அறிவித்த தொகையிலிருந்து ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்த நிலையில் அது 3.8 சதவீதமாக அதிகரிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் நிதி அளவைக் குறைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு ரூ.6,556 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.3,314 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது பாதிக்கும் குறைவான தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிகமான மக்களுக்குச் சுகாதாரக் காப்பீடு வழங்கும் திட்டம் என்று மத்திய அரசு கூறிய நிலையில், நடப்பு நிதியாண்டில் நிதி பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கும் திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் இருக்கிறது. 10.74 கோடி ஏழைக் குடும்பங்களும், 50 கோடி மக்களும் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று பல்வேறு திட்டங்களுக்குத் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் நிதி அளவு குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு வரி வருவாய் பற்றாக்குறையால் கடும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கியுள்ள நிலையில், தான் அறிவித்த திட்டங்களுக்கான நிதியைக் குறைக்க வேண்டிய நிலையிலும், சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலையிலும் இப்போது இருக்கிறது.

மற்றொரு முக்கியமான திட்டம் தேசிய கங்கா திட்டமாகும். பிரதமர் மோடி அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான கங்கா திட்டம், கங்கை நதியைத் தூய்மையாக்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.750 கோடி அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது ரூ.353 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்த தூய்மை இந்தியா திட்டமாகும். திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதை ஒழிப்பது, சுகாதாரம், சுத்தம் ஆகியவற்றை வலியுறுத்தும் திட்டமாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.12 ஆயிரத்து 644 கோடி அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது ரூ.9 ஆயிரத்து 638 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணை முறையில் ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்துக்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.75 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இந்தத் தொகை ரூ.54 ஆயிரத்து 370 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x