Last Updated : 02 Feb, 2020 01:14 PM

 

Published : 02 Feb 2020 01:14 PM
Last Updated : 02 Feb 2020 01:14 PM

எல்ஐசி பங்குகள் விற்பனை எப்போது தொடங்கும்? மத்திய நிதித்துறைச் செயலாளர் பதில்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள், பங்குச்சந்தையில் எப்போது ஐபிஓ முறையில் விற்பனைக்கு வரும் என்பது குறித்து மத்திய நிதித்துறைச் செயலாளர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் பழமையான நிறுவனமான எல்ஐசி முழுமையாக மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற காப்பீட்டு நிறுவனமாகும். காப்பீட்டுத் துறையில் ஏறக்குறைய 70 சதவீதப் பங்களிப்பை எல்ஐசி நிறுவனம் வைத்துள்ளது. அதாவது 76.28 காப்பீடு பாலிசிகள் எல்ஐசி நிறுவனத்தின் சார்பில்தான் இருந்து வருகிறது.

இந்நிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், " அடுத்த நிதியாண்டில் எல்ஐசி நிறுவனத்தில் அரசு கைவசம் வைத்திருக்கும் பங்குகளில் ஒரு பகுதியைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு விற்பனை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

இந்த முடிவுக்கு எல்ஐசி நிறுவன ஊழியர்கள், காப்பீடு நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுக்கு எதிராக வரும் நாட்களில் போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

இந்த சூழலில் மத்திய நிதித்துறைச் செயலாளர் ராஜீவ் குமார் பட்ஜெட் தொடர்பாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் எல்ஐசி நிறுவனப் பங்குகள் விற்பனை எப்போது தொடங்கும் என்பது குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில், "எல்ஐசியின் பங்குகளை பங்குச்சந்தையில் விற்பனை செய்வதில் ஏராளமான நடைமுறைகள் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் சட்டரீதியான சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்தால்தான் பட்டியலிட முடியும்.

மத்திய சட்டத்துறை அமைச்சகத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. 2020-21 ஆம் நிதியாண்டின் இரண்டாம் பகுதியில் எல்ஐசி பங்குகள் பங்குச்சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன். எல்ஐசி பங்குகள் வெளிப்படைத்தன்மையுடன், பொதுமக்கள் பங்கேற்புடன் விற்பனை செய்யப்படும்.

எத்தனை சதவீதம் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 10 சதவீதப் பங்குகளுக்குக் குறைவில்லாமல் இருக்கும். இதன் மூலமும், ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமும் அரசுக்கு ரூ.90 ஆயிரம் கோடியை எதிர்பார்க்கிறது. முதலீட்டு விலக்கல் திட்டத்தில் அடுத்த நிதியாண்டில் , ஒட்டுமொத்தமாக ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x