Published : 02 Feb 2020 11:50 AM
Last Updated : 02 Feb 2020 11:50 AM

கிராமப்புற மக்களுக்குப் பயனளிக்கும் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி பட்ஜெட்டில் ரூ.9,500 கோடி குறைப்பு

கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும், மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்ட 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதியை 2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.9,500 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற பொருளாதாரம் ஏற்கெனவே மந்தமான நிலையில், சோர்வடைந்திருக்கிறது. அதை ஊக்குவிக்க மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு (100 நாள் வேலைவாய்ப்பு) அதிகமான நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு குறைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.71 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், 2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 13 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.61,500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டுக்கு முன் ஏராளமான பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்த ஆலோசனையில், கிராமப்புற பொருளாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. அதை ஊக்குவிக்க வழி தேடுங்கள் என்று அரசிடம் தெரிவித்திருந்தனர்.

மத்திய அரசு நேரடியாக மக்களிடம் பணத்தை வழங்க இயலாது. ஆனால், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் மக்களுக்குப் பணத்தை வழங்கி அதன் மூலம் அவர்கள் செலவு செய்தால் நாளடைவில் பொருளாதாரம் சுழற்சி வேகமெடுக்கும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், அனைத்துக்கும் மாறாக இந்தத் திட்டத்துக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொருளாதார விவகாரத்துறைச் செயலாளர் அதானு சவுத்ரியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறுகையில், " இப்போது இந்த நிதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மறு ஆய்வு செய்து கூடுதல் நிதி பின்னர் ஒதுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.71 ஆயிரம் கோடி நிதி ஏராளமான மாநிலங்களுக்குப் போதவில்லை. 15 மாநிலங்களுக்குப் பற்றாக்குறையாக இருக்கிறது. இன்னும் கூடுதல் நிதியை நடப்பு நிதியாண்டில் ஒதுக்கினால்தான் ஓரளவுக்கு கிராமப்புற மக்களுக்கு உதவும். இந்த சூழலில் அடுத்த நிதியாண்டில் நிதியைக் குறைத்தது கிராமப்புற பொருளாதாரத்தை மேலும் நலிவுடையச் செய்யும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜேந்திரன் நாராயணன் கூறுகையில், "100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நம்பி இருக்கும் ஏழை மக்களைப் பரிகாசம் செய்வது போன்று இந்த முறை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கிராமப்புறப் பொருளாதாரம் பெரும் சிக்கலிலும், அபாயத்தை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறது.

பிஎல்எப்எஸ் சர்வேபடி 2017-18 ஆம் ஆண்டில் கிராமப்புற வேலையின்மை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 45 ஆண்டுகளில் இல்லாத மோசமானதாகும். இதில் இரட்டை இலக்க பணவீக்கம் போன்றவை நிலமில்லாத அன்றாடம் கூலித் தொழிலாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x