Last Updated : 02 Feb, 2020 11:14 AM

 

Published : 02 Feb 2020 11:14 AM
Last Updated : 02 Feb 2020 11:14 AM

6 இந்தியர்களை அனுப்ப சீனா மறுப்பு: 2-வது ஏர் இந்தியா விமானம் 323 பயணிகளுடன் டெல்லி வந்தது

சீனாவின் கரோனா வைரஸால் அதிகமான பாதிப்புக்குள்ளாகி இருக்கும் வுஹான் நகரில் இருந்து 323 இந்தியர்கள், 7 மாலத்தீவு நாட்டவர்களை அழைத்துக் கொண்டு 2-வது ஏர் இந்தியா விமானம் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.

இதுவரை சீனாவில் இருந்து 654 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹூபி மாநிலத்தில் உள்ள வுஹான் நகரை மையமாக வைத்துப் பரவிய கரோனா வைரஸால் இதுவரை 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 நாடுகளுக்கும் மேலாகப் பரவியுள்ளது.

இந்நிலையில் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் இரு ஜம்போ விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி முதல் விமானத்தில் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

2-வது ஏர் இந்தியா விமானம் சனிக்கிழமை இரவு வுஹான் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது. அங்கு தயாராக இருந்த 323 இந்தியர்கள், மாலத்தீவு நாட்டவர் 7 பேரை அழைத்துக் கொண்டு இன்று காலை டெல்லி வந்தடைந்தது.

ஏர்இந்தியா விமானத்தில் அழைத்துவரப்பட்ட பயணிகள்

சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

''இந்தியாவின் 2-வது ஏர் இந்தியா விமானம் 323 இந்தியர்கள், மாலத்தீவு நாட்டவர் 7 பேரை அழைத்துக் கொண்டு வுஹான் நகரை விட்டுப் புறப்பட்டுள்ளது. சீனா வெளியுறவுத்துறை, உள்ளூர் நிர்வாகத்தினருக்கு நன்றி.

96 மணிநேரம் தொடர்ந்து உழைத்து ஹூபி, வுஹான் நகரின் பல்வேறு இடங்களிலும் இருந்த இந்தியர்களை ஒன்று சேர்த்து அழைத்து வந்த வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

குறிப்பாக என்னுடன் பணியாற்றும் தீபக் பத்மகுமார், எம்.பாலகிருஷ்ணன் ஆகிய இரு அதிகாரிகளும் இந்தியர்கள் அனைவரையும் வழியனுப்பி வைக்கும் வரை உடனிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

2-வது விமானத்தில் 6 இந்தியர்களை அனுமதிக்க சீன அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 6 இந்தியர்களுக்கும் அதிகமான காய்ச்சல் இருந்ததால், அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனக் கருதி அவர்களை நாட்டை விட்டுச் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.

இன்னும் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஹூபி மாநிலத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா சென்று சேர்ந்தும் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்".

இவ்வாறு சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்கள் அனைவருக்கும் டெல்லி அருகே இருக்கும் மனேசரில் உள்ள இந்திய ராணுவ மருத்துவ முகாமில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவுடன் கொண்டிருக்கும் நட்புறவால் மாலத்தீவு நாட்டவர்கள் 7 பேரும் அழைத்து வரப்பட்டு டெல்லியில் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x