

இந்தியாவில் 2-வது நபர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய அந்த நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தனி வார்டில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இதற்கிடையே சீனாவின் வுஹான் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவிக்கு முதன்முதலாக கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மாணவிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வுஹான் நகரை மையமாக வைத்து பரவி வரும் கரோனா வைரஸ் உலக நாடுகளைக் கதிகலங்க வைத்து வருகிறது. இதுவரை 20 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸுக்கு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கேரளாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் சீனாவின் வுஹான் நகரில் தங்கிப் படித்து வந்தனர். அவர்கள் முதல் கட்டமாக ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்த வரப்பட்டனர். இதில் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு மருத்துவச் சோதனை நடத்தியதில் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே கேரளாவில் 90-க்கும் மேற்பட்டவர்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கேரளாவைச் சேர்ந்தவர் ஒருவர் சீனாவில் இருந்து சமீபத்தில் இந்தியா வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ் இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால், அவர் எங்கிருக்கிறார், எந்த மருத்துவமனை குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
இதன் மூலம் இந்தியாவில் 2-வது நபர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜா நிருபர்களிடம் கூறுகையில், "கரோனா வைரஸ் குறித்து மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் இந்தத் தகவல்களை மற்றவர்களுக்குப் பகிர்ந்துள்ளார்கள். அவர்களையும் போலீஸார் தேடி வருகிறார்கள். இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சீனாவில் இருந்து இதுவரை 1,793 பேர் கேரளா திரும்பியுள்ளனர். அவர்களில் 70க்கும் மேற்பட்டோர் தனியாகத் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 1,723 பேர் வீட்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 39 ரத்த மாதிரிகள் தேசிய வைரலாஜி அமைப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டதில் 23 பேருக்கு கரோனா வைரஸ் இல்லை எனத் தெரியவந்தது.
24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை மாநிலத்தில் கரோனா வைரஸுக்காக தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு அரசு மருத்துவமனைகள் கரோனா வைரஸ் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்க ஒதுக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு மையமும் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 1793 பேரில் 268 பேர் கோழிக்கோட்டிலும், 238 பேர் எர்ணாகுளத்திலும், 265 பேர் மலப்புரத்திலும், 156 பேர் கொல்லம் மாவட்டங்களிலும் வீடுகளில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.