Published : 02 Feb 2020 07:33 AM
Last Updated : 02 Feb 2020 07:33 AM

எல்ஐசியை பட்டியலிடுவது பாதிப்பை ஏற்படுத்தும்: மத்திய பட்ஜெட் குறித்து தொழில்துறையினர் கருத்து

மத்திய பட்ஜெட் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் சாதக,பாதக அம்சங்கள் குறித்து தென்னிந்தியவர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் (சிக்கி) உறுப்பினர்களும், வெவ்வேறு துறைசார்ந்த தலைவர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆர். கணபதி, தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் தலைவர்: மத்திய அரசின் புதிய பட்ஜெட் தனியார் துறைகளை சுதந்திரமாக செயல்படச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. சுற்றுலாத் துறையைமேம்படுத்தப்படுத்தும் வகையிலான குறிப்பிடத்தக்க திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. அதேபோல் வரிதொடர்பான செயல்பாடுகளை டிஜிட்டல் நடைமுறைக்கு மாற்றியிருப்பது வரவேற்கத்தக்க திட்டங்களில் ஒன்று. நாட்டின் உள்கட்டமைப்பு சார்ந்து அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பைச் செலுத்தும்.

ஸ்ரீராம், வரிவிதிப்பு கமிட்டியின் தலைவர், சிக்கி: வரி விகிதம் தொடர்பான மாற்றங்கள் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாக உள்ளன. தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான அம்சங்கள் இந்தப் பட்ஜெட்டில் உள்ளன. வரி தொடர்பான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டிருப்பதால் ஏற்றுமதியாளர்கள் பயன்பெறுவார்கள். அதேசமயம் எல்ஐசியை பங்குச் சந்தையில் பட்டியலிட்டு அதன் மூலம் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருப்பது, தவறான திட்டமாகத் தெரிகிறது. அது நாட்டின் நிதி நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ரகு சங்கர், லாஜிஸ்டிக் பிரிவின் தலைவர், சிக்கி: எதிர்பார்த்த அளவிலான சீர்திருத்தங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை. போக்குவரத்து தொடர்பாக சில ஒதுக்கீடுகள் இருந்தாலும், லாஜிஸ்டிக் துறை சார்ந்து இருந்துவரும் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்கும்படியான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. உள்கட்டமைப்பு சார்ந்து மத்திய அரசின் முன்னெடுப்புகள் குறிப்பிடும்படியாக உள்ளன.

வி.எஸ். மணி, தலைமை நிர்வாக இயக்குநர், பியூச்சர் ஃபோகஸ்: நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிக முக்கிய அங்கமாக மாறியுள்ளன. அந்தவகையில் இந்தப்பட்ஜெட்டில் ஸ்டார்ட் அப் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறிப்பிடும்படியான திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. அதேசமயம், மீன்வளத் துறை தொடர்பாக கொண்டுவரப்பட்டு வளர்ச்சித் திட்டங்கள், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக வழிவகுக்கும்.

சி.கே. மோகன், எம்எஸ்எம்இ: முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலான பல திட்டங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது. சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான நடைமுறைகள் மாற்றங்கள் கொண்டுவந்திருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தபோதிலும், அந்நிறுவனங்களின் அடிப்படைப் பிரச்சினைகள் எதுவும் பட்ஜெட்டில் அடையாளம் காணப்படவில்லை என்பது முக்கிய குறையாக உள்ளது.

வி.எம். முரளிதரன், தலைவர், எத்திராஜ் பெண்கள் கல்லூரி: இந்த முறை கல்வி மேம்பாட்டில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. அந்தவகையில், இணையவழி பட்டப்படிப்புத் திட்டம் மிக முக்கியமான ஒன்று. தவிர, வெளிநாட்டு மாணவர்களை இந்தியக் கல்வி நிலையங்களை நோக்கி ஈர்க்கும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருப்பது வரவேற்புக்கு உரியது. அதேபோல், திறன் மேம்பாடு தொடர்பான மத்திய அரசின் திட்டங்கள், நாட்டின் வேலைவாய்ப்பு சார்ந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கும்.

மோகன் நாராயணன், மனிதவளப் பிரிவின் தலைவர், சிக்கி: ஒட்டிமொத்த அளவில் இந்தப் பட்ஜெட் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்து நேரடித் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாவிட்டாலும், நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலமே சாத்தியப்படக்கூடியவை. அந்த வகையில் இந்தப் பட்ஜெட்டால் அதிக பயன்பெறும் துறைகளில் முதன்மையானதாக தகவல் தொழில்நுட்பத் துறை இருக்கும்.

நந்தகுமார், நிர்வாக இயக்குநர், இடிஏசி இன்ஜினீரிங், எரிசக்தித் துறை: புதிதாக தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிறுவன வரி 15 சதவீதமாக கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது எரிசத்தித் துறையையும் அந்த வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எரிசக்தி துறையின் வளர்ச்சியைப் பொறுத்தே நாட்டின் வளர்ச்சி அமைகிறது. அந்தவகையில் வரும் நிதி ஆண்டில் நாமினல் ஜிடிபி 10 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறெனில் எரிசக்தி துறையின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்க வேண்டும். தற்போது எரிசக்தி துறை சற்று சரிவைக் கண்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு எரிசக்தி துறை வளர்ச்சி கண்டால் மட்டுமே அரசு அதன் வளர்ச்சி இலக்கை எட்ட முடியும்.

ரவிச்சந்திரன் - வேளாண்துறை: இந்த பட்ஜெட் வேளாண் துறை சார்ந்துமுக்கியத் திட்டங்களைக் கொண்டுள்ளது. விவாசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்குநிர்ணயித்துள்ளது. தண்ணீர் பிரச்சினையை சரி செய்யும் வகையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. சோலார்பேனல் அமைப்பது தொடர்பான திட்டங்கள் அத்துறையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உருவாக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x