Published : 02 Feb 2020 06:47 AM
Last Updated : 02 Feb 2020 06:47 AM

சீனாவிலிருந்து 324 பேர் இந்தியா திரும்பினர்; டெல்லி மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு

சீனாவிலிருந்து இந்தியா திரும்பியுள்ள 324 பேர் டெல்லி அருகேஉள்ள மனேசர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கரோனா வைரஸால் அந்நாட்டில் நேற்றுவரை 259 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11,791 நபர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பால் (டபிள்யூஎச்ஓ) சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் சீனாவில் உயிரிழப்பு அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.

இதைத்தொடர்ந்து உலக நாடுகள் பலவும் சீனாவில் வசித்து வரும் தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் சீனாவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள வூஹான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. முதலில் வூஹான் நகரில் இருந்து யாரையும் வெளியேற்ற முடியாது என்று சீன அரசு கூறிவிட்டது. இதனால் அந்த நகரில் சுமார் 500 இந்தியர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து சீன அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முக கவசம், உணவு உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு உருவாகி இருப்பதால் இந்தியர்களை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து சீன அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக சிறப்பு விமானம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் சீனாவுக்கு புறப்பட்டது. வூஹான் நகரில் இருந்து முதல் கட்டமாக 324 இந்தியர்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த விமானம், நேற்று காலை 7.30 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது.

அவர்களுக்கு கரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என்பது குறித்து டெல்லி விமான நிலையத்தில் மருத்துவர்கள் குழுவினர் தீவிர பரிசோதனை செய்தனர். இதற்காக விமானம் தரையிறங்க உள்ள ஓடுபாதையின் ஓரத்திலேயே முகாம் அமைக்கப்பட்டது. அங்கு இருந்த மருத்துவர்கள் குழு அவர்களுக்கு சோதனையை நடத்தினர். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அவர்கள் டெல்லி அருகே மனேசரில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சிறப்பு மருத்துவமனை, முகாமில், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே வூஹான் நகரில் எஞ்சியுள்ள இந்தியர்களை அழைத்து வர மற்றொரு ஏர் இந்தியா விமானம் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

அதுமட்டுமல்லாமல் சீனாவில் இருந்து திரும்பும் இந்தியர்களுக்கு சிகிச்சை அளிக்க தெற்கு டெல்லியில் உள்ள சாவ்லா பகுதியில் 600 படுக்கை வசதி கொண்ட மற்றொரு சிறப்பு மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x