பாஜகவின் இந்து ராஷ்டிரா திட்டத்தின் ஒரு பகுதியே குடியுரிமை திருத்த சட்டம்: ‘இந்து’ என்.ராம் கருத்து

பாஜகவின் இந்து ராஷ்டிரா திட்டத்தின் ஒரு பகுதியே குடியுரிமை திருத்த சட்டம்: ‘இந்து’ என்.ராம் கருத்து

Published on

பாஜகவின் இந்து ராஷ்டிரா திட்டத்தின் ஒரு பகுதிதான் குடியுரிமை திருத்த சட்டம் என்று ‘இந்து’ என்.ராம் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்தும் ‘மும்பை கலெக்டிவ்’ என்ற அமைப்பு சார்பில் ‘இந்திய அரசியலில் எழுச்சி அலை’ என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் கலந்துகொண்டு ‘இந்து’ என்.ராம் பேசியதாவது:

நாட்டின் பொருளாதார நிலை மோசமாக உள்ளது. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் போன்றவற்றை தந்திரமாக மத்திய அரசு கொண்டுவருகிறது. இது திசைதிருப்பும் தந்திரம் மட்டுமின்றி பாஜகவின் இந்து ராஷ்டிரா திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் பார்க்கிறேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவின் தேர்தல் அறிக்கையில், குடியுரிமை சட்டத்தை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அண்டை நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தப்பட்டு இந்தியா வரும் இந்துக்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், சீக்கியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. முதலில் பாஜகவின் பட்டியலில் கிறிஸ்தவர்கள் இல்லை. பின்னர், அவர்களும் சேர்க்கப்பட்டனர். தேசிய குடிமக்கள் பதிவேடு அசாமில் முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் பின்னர், மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த பரிசீலிக்கப்படும் என்றும் பாஜக கூறியது. அமித் ஷாவும் இதைக் கூறினார்.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் அனுபவம் அங்குள்ள ஏழை மக்களை அச்சுறுத்துகிறது. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியலில் நாட்டுக்காக போராடியவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள், கட்டுப்பாட்டுடன் போராட்டங்கள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். போராட்டம் வலுவிழக்க இடம்தரக்கூடாது. இவ்வாறு ‘இந்து’ என்.ராம் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in