Last Updated : 01 Feb, 2020 06:24 PM

 

Published : 01 Feb 2020 06:24 PM
Last Updated : 01 Feb 2020 06:24 PM

வரலாற்று ஆய்வு, நிரூபணங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு முயற்சி: பட்ஜெட் உரை குறித்து சு.வெங்கடேசன் விமர்சனம்

இதுவரை நடத்தப்பட்ட வரலாற்று ஆய்வையும், அதன் நிரூபணங்களையும் மாற்றி அமைக்க மத்திய அரசு முயல்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் தாக்கலின்போது கூறிய வரலாற்றுக் கருத்துகளையும் அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மதுரை தொகுதி எம்.பியும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான சு.வெங்கடேசன் கூறியதாவது:

''நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பல அதிர்ச்சிகள் வெளியாகி உள்ளன. இம்முறை பொருளாதாரம் தாண்டி வரலாறு பண்பாடு என்று தனது தாக்குதல் எல்லை விரிவாக்கப்பட்டுள்ளது.

‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ எனப் புதிய பெயர் சூட்டி இதுவரை நடந்த ஆய்வுகளையும், நிரூபணங்களையும் முற்றிலும் மாற்றி அமைக்க நினைக்கிறது மத்திய அரசு. வேத பண்பாட்டினை சரஸ்வதி நாகரிகம் எனப் பெயர் சூட்டி அதனை சிந்துவெளி நாகரிகத்தின் மீது பொருத்த தொடர்ந்து இந்துத்துவா வாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

அந்த முயற்சியின் அதிகாரபூர்வமான குரலாக மத்திய நிதியமைச்சரின் குரல் இன்று அவையில் எதிரொலித்தது. நாகரிகத்தின் அடிப்படை அடையாளம் செங்கலும், பானையும் கண்டுபிடித்ததில் இருக்கிறது. ஆனால், வேதத்தில் செங்கலையும் பானையையும் செய்பவர்கள் அசுரர்கள் என்று வசைபாடப்படுகிறார்கள். இந்த நிலையில், தங்களை நாகரிகவாதி என எப்படி இந்துத்துவாவாதிகள் உரிமை கொண்டாட முடியும்?

இவர்களுக்கும் சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? சடங்குகளுக்காக ஆங்காங்கே கற்களையும் சுடாத செங்கலையும் பயன்படுத்தி ஹோமம் செய்து, பின்னர் கலைத்துவிட்டுப் போகிற பழக்கத்தைத்தான் வேத காலத்தில் பார்க்க முடிகிறது.

சடங்குகள் பற்றிய வேத இலக்கியக் குறிப்பில் சதபத பிராமணத்தில் அக்னிசேனா என்ற சடங்கிற்குத்தான் முதன் முதலில் செங்கலைப்பற்றிய குறிப்பே வருகிறது. அதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி நாகரிகத்தில் சுட்ட செங்கல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

இன்றைய கீழடி கண்டுபிடிப்பிலும் சுட்டசெங்கல் பயன்பாட்டினைப் பார்க்க முடியும். எனவே, இதுவரை நிரூபிக்கப்பட்ட வரலாற்றினைப் புராணங்களோடு இணைத்து இவர்களின் கதைகளை தேசத்தின் வரலாறாக மாற்ற முயற்சிக்கப்படுகிறது.

மத்திய அரசின் பாரம்பரிய தொல்லியல் இடங்களாக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ஆதிச்சநல்லூரின் பின்னணியையும் விலக்கிவிட்டுப் பார்க்க முடியவில்லை.

ஒளவை தனது ஆத்திச்சூடியில் “மண் பறித்து உண்ணேல்” என்பாள். வரலாறும், பண்பாடும் கொண்ட மனிதக்கூட்டத்தின் வாழ்விடந்தான் மண். அதனை ஒரு போதும் அதிகாரத்தால் பறித்துவிட முடியாது''.

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x