Last Updated : 01 Feb, 2020 05:02 PM

 

Published : 01 Feb 2020 05:02 PM
Last Updated : 01 Feb 2020 05:02 PM

புதிய பாட்டிலில் பழைய மது; வேளாண் வளர்ச்சி எப்படி 11 சதவீதம் உயரும்? பட்ஜெட் குறித்து சிவசேனா, காங்கிரஸ்,என்சிபி கட்சிகள் அதிருப்தி

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்

மும்பை,

புதிய பாட்டிலில் பழைய மது என்ற அடிப்படையில்தான் மத்திய அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அமைந்திருக்கிறது. இந்த பட்ஜெட் மிகுந்த அதிருப்தி அளிக்கிறது என்று சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்சிபி கட்சிகள் தெரிவித்துள்ளன

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் குறித்து மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பாலசாஹேப் தோரட்

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பாலசாஹேப் தோரட் நிருபர்களிடம் கூறுகையில், " இந்த பட்ஜெட்டில் மகாராஷ்டிரா மாநிலமும், மும்பையும் ஒதுக்கப்பட்டுவிட்டது அதிருப்தி அளிக்கிறது. மும்பைதான் அதிகமான வரியை அரசுக்கு செலுத்துகிறது, மத்தியஅரசுக்கு அதிகமான வரியை மகாராஷ்டிரா மாநிலம் அளிக்கிறது, ஆனால், முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் பழைய மதுவை புதிய புட்டியில் அடைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

விவசாயிகள் வருமானம் 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயத்துறை வளர்ச்சி 2 சதவீதமாக இருக்கும் நிலையில் 11 சதவீதத்தை எட்டினால்தான் வருமான இரட்டிப்பாக்க முடியும். பின் எவ்வாறு விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவார்கள். இது பொய்யான அறிவிப்பு" எனத் தெரிவித்தார்

சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணிஷா கயாண்டே நிருபர்களிடம் கூறுகையில், " மத்திய அரசு அறிவித்த அறிவிப்புகளில் தெளிவான விஷயம் ஏதும் இல்லை. யாரெல்லாம் வரிவிலக்கு பெறுவார்கள் என்ற விளக்கம் இல்லை. ஒருவர் எல்ஐசி அல்லது மருத்துவக்காப்பீடு பெற்றிருந்தால், அவர் வரிச்சலுகை பெற தகுதியானவரா என்கிற தெளிவு இல்லை. வரிவிலக்கு பெறுவதற்காகவே மக்கள் இதுபோன்ற விஷயங்களில் முதலீடு செய்கிறார்கள். இதில் தெளிவான பார்வை இல்லை. ஏர் இந்தியா போன்ற அரசு நிறுவனங்கள் மூடப்படுவது வருத்தம் அளிக்கிறது. இப்போது எல்ஐசி மீது மத்திய அரசு கவனத்தை திருப்பியுள்ளது. அதில் 2.90 கோடி மக்கள் முதலீடு செய்துள்ளார்கள்" எனத் தெரிவித்தார்

என்சிபி கட்சியின் செய்தித்தொடர்பாளர் மகேஷ் டபாசே நிருபர்களிடம் கூறுகையில், " மத்திய அரசின் பட்ஜெட் அதிகமான நம்பிக்கை அளித்தாலும், முதலீட்டாளர்கள், தொழில்துறையினர், நுகர்வோர்கள் மத்தியில் நம்பிக்கையில்லை. பங்குச்சந்தையில் உடனடி சரிவு ஏற்பட்டது உடனடியாக எதிர்மறையான விமர்சனம் இருப்பதை காட்டிவிட்டது" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x