

2020-21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் , மத்திய அரசின் வசம் எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் பங்குகளில் ஒருபகுதி, பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் விற்கப்படும் என்ற அறிவிப்புக்கு தொழிற்சங்க அமைப்புகள், அனைத்து இந்தியக் காப்பீடுத்துறை ஊழியர்கள் அமைப்பு ஆகியவை கண்டனம்
2020-21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசியில் அரசின் வசம் இருக்கும் பங்குகளில் ஒரு பகுதியை பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் விற்கப்படும் என அறிவித்தார்
இதற்கு அனைத்து இந்திய காப்பீடு ஊழியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதன் பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா நிருபர்களிடம் கூறுகையில், "எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். முதல் கட்டமாக வரும் 3 அல்லது 4-ம் தேதி ஒரு மணிநேரம் வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறோம். அதன்பின் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்வோம். எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் விற்பனை செய்வது என்பது எளிதான விஷயம் அல்ல. அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம்.
ஏர் இந்தியா போன்ற நிறுவனத்தை விற்க முன்வந்து யாரும் வாங்க முன்வராததால், ப்ளூசிப் நிறுவனமான எல்ஐசியை விற்கத் துணிந்துவிட்டது அரசு. எங்களின் போராட்டத்துக்கு பொதுத்துறை காப்பீடு நிறுவன ஊழியர்களும் ஆதரவு அளிப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
எல்ஐசி தொழிலாளர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த நடவடிக்கை தேச நலனுக்கு விரோதமானது. கடந்த 1956-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட எல்ஐசி நிறுவனம் முழுமையும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. மிகப்பெரிய பங்கை அரசு கொண்டிருக்கும்போது, அதை விற்பது தவறு. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு எல்ஐசி ஏராளமான பங்களிப்பு செய்துள்ளது. அதை நீர்த்துப் போகும் விதமாக அரசு செயல்படுவது, நாட்டின் பொருளாதார இறையாண்மைக்கு ஆபத்தாக அமையும். விரைவில் எல்ஐசி ஊழியர்கள் தேசிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்போம்" எனத் தெரிவித்தார்.