

மத்திய அரசிடம் இருக்கும் எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் பங்குகளில் ஒருபகுதி ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் விற்பனை செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். எல்ஐசி நிறுவனம் குறித்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், "எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் மத்திய அரசிடம் இருக்கின்றன. மத்திய அரசிடம் இருக்கும் அந்தப் பங்குகளின் ஒருபகுதியை, பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் விற்பனை செய்யப்படும்.
வங்கிகளில் டெபாசிட்கள், நகைகள் உள்ளிட்டவைக்கு இதற்கு முன் ரூ.1 லட்சம் மட்டுமே காப்பீடு இருந்து வந்தது. அதாவது வங்கி திவாலானாலோ அல்லது, வங்கியில் கொள்ளை, தீ விபத்து உள்ளிட்டவே ஏதேனும் நடந்தால் வாடிக்கையாளர்கள் எவ்வளவு பணம் டெபாசிட் செய்திருந்தாலும் அதற்கு 1 லட்சம் ரூபாய் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த ரூ.1 லட்சம் காப்பீடு தற்போது ரூ.5 லட்சமாக 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வைப்புக் காப்பீடு மற்றும் கடன் உறுதிக் கழகம் (டிஐசிஜிசி) எனும் ரிசர்வ் வங்கிக்கு கட்டுப்பட்ட அமைப்புதான் வங்கி டெபாசிட்களுக்கு காப்பீடு அளித்து வந்தது. காப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.
அதேபோல பங்குச்சந்தையில் அந்நிய நிறுவன முதலீடு (எப்பிஐ) கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் இதுவரை 9 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. இது 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அரசின் சில பங்குகளில் அந்நிய முதலீ்ட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
புதிதாக தேசிய வேலைவாய்ப்பு அமைப்பு உருவாக்கப்படும். இந்த அமைப்பு மூலம் கெஜடட் அல்லாத அரசுப் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தி தகுதியான ஆட்களை இந்த அமைப்பு தேர்வு செய்யும்" என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.