

2020-21 ஆம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்படும். இதற்காக 2 லட்சத்துக்கும் மேலான ஆலோசனைகள் வரப்பெற்றுள்ளன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
கல்வித்துறை மத்திய அரசின் ஒதுக்கீடு குறித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
" 2020-21 ஆம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கை அறிமுகம் செய்யப்படும். கல்விக்கொள்கைக்காக 2 லட்சத்துக்கும் மேலான ஆலோசனைகள் மத்திய அரசுக்கு வந்துள்ளன.
2020-21 ஆம் ஆண்டில் கல்வித்துறைக்காக மத்திய அரசு ரூ.99 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி திறன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும்.
கல்வித்துறையில் வர்த்தகரீதியான கடன் பெறுதலுக்கும், கல்வித்துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி தர நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர, உள்ளாட்சி அமைப்புகள் இளம் பொறியாளர்கள் படிக்கும்போதே பயிற்சி பெறும் கல்வி ரீதியான பயிற்சி அளிக்கத் திட்டம் வகுக்கப்படும்.
தேசிய போலீஸ் பல்கலைக்கழகம், தேசியத் தடயவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
கல்வித் தரவரிசையில் முதல் 100 இடங்களில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்பு வரை முழுமையாக ஆன்லைன் மூலம் கல்வித் திட்டம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளோடு இணைக்கும் திட்டம் முன்மொழியப்படும், மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க தனியார் மருத்துவர்கள் அழைக்கப்படுவர். ஆசிரியர்கள், நர்ஸ்கள், பாரா மெடிக்கல் படிப்பவர்களுக்கு சிறப்புப் பாடப்பிரிவுகள் உருவாக்கப்படும்.
தூய்மை இந்தியா திட்டத்துக்காக 2020-21 ஆம் ஆண்டில் ரூ.12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்படும். வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்காக ரூ.3.6 லட்சம் கோடி வழங்கப்படும். விரைவில் புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி அறிவிப்பார்''.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.