

2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. கடந்த ஆண்டைப் போலவே பாரம்பரிய சிவப்புப் பையில் ஆவணங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்து வந்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட்டாக இது இருந்தாலும், அவர் தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாக்கூர், நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்துப் பேசினார்கள்.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக மஞ்சள் நிறப் புடவையில் வந்திருந்த நிர்மலா சீதாராமன், கடந்த ஆண்டைப் போலவே கையில் சிவப்பு நிறப் பையில், பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டு வந்திருந்தார். அந்தப் பையில் தங்க நிறத்தில் இந்தியச் சின்னம் இடம் பெற்றிருந்தது.
முன்னதாக 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று காலை ஒப்புதல் அளித்தது. பட்ஜெட் தாக்கலையொட்டி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜிதேந்திரசிங் உள்ளிட்டோர் வரிசையாக வந்தனர்.
பட்ஜெட்டைத் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "இந்த பட்ஜெட் மக்களின் வருவாயை உயர்த்தி, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் வலுவாக இருக்கின்றன. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. தேங்கிக்கிடந்த கடன்களை எல்லாம் வங்கிகள் வசூலித்துவிட்டன.
சரக்கு மற்றும் சேவை வரி இந்த அரசின் வரலாற்றுச் சிறப்பான சீர்திருத்த நடவடிக்கை. பொருளாதார ரீதியில் நாட்டை உயர்த்தியுள்ளது. ஜிஎஸ்டி வந்தபின், மக்களின் சேமிப்பு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இந்த பட்ஜெட் நிறைவேற்றும்" எனத் தெரிவித்தார்.