23 குழந்தைகளை சிறைபிடித்தவரை சுட்டுக் கொன்றது போலீஸ்: மனைவியை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

23 குழந்தைகளை சிறைபிடித்து வைத்திருந்த நபரை உத்தரபிர தேச போலீஸார் சுட்டுக் கொன்று குழந்தைகளை மீட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டம் கசாரியா கிராமத்தைச் சேர்ந்த ரவுடி சுபாஷ் பாத்தம் என்பவர் 2011-ம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார்.

கிராமத்துக்கு வந்த அவர் தனது மகளின் பிறந்தநாள் நிகழ்ச்சி வீட்டில் நடைபெறுவதாக கூறி, அப்பகுதியை சேர்ந்த 23 குழந்தைகளை வீட்டுக்கு நேற்றுமுன்தினம் அழைத்து வந்து துப்பாக்கி முனையில் சிறை பிடித்தார். இந்த குழந்தைகள் அனைவரும் 6 மாதம் முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

குழந்தைகளைக் காணாமல் அவர்களது பெற்றோர், சுபாஷ் பாத்தமின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அவர்கள்மீது கையெறி குண்டுகளை சுபாஷ் வீசினார். மேலும் துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட்டார். இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸார், கமாண்டோ படையினர் விரைந்து வந்து சுற்றிவளைத்தனர்.

அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் தமது மனைவியை கிராமத்தினர் சிலர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகவும், அக்குற்றத்தை செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுபாஷ் போலீஸாரிடம் தெரிவித்தார். மேலும் தனக்கு பிரதமர் திட்டத்தின்கீழ் இலவசமாக வீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து போலீஸார் அவரது கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தனர். அதன் பிறகு ஒரு குழந்தையை மட்டும் சுபாஷ் விடுவித்தார். 22 குழந்தைகளை விடுவிக்காமல் வைத்துக் கொண்டார்.

இதையடுத்து போலீஸாரும், கமாண்டோ படையினரும் அதிரடியாக களத்தில் இறங்கி, சுபாஷை துப்பாக்கியால் சுட்டு குழந்தைகளை மீட்டனர். அப்போது சுபாஷின் மனைவியை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அடித்துக் கொன்றனர்.

இதுகுறித்து உத்தரபிரதேச மாநில போலீஸ் டிஜிபி ஓ.பி.சிங் கூறும்போது, “ நேற்று மாலை 5.45 மணிக்கு எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் இங்கு வந்தோம். பின்னர் போலீஸார், கமாண்டோ படையினர் இணைந்து அதிரடியாக நடவடிக்கை எடுத்து 8 மணி நேரத்தில் அனைத்து குழந்தைகளையும் மீட்டோம்.

சுட்டுக் கொல்லப்பட்ட சுபாஷ் பாத்தம், மனநிலை சரியில்லாதவர் போன்று தோன்றுகிறது. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது 6 மாத கைக்குழந்தையை, அருகிலிருந்த வீட்டைச் சேர்ந்தவர்களிடம் பால்கனியிலிருந்து ஒப்படைத்தார். பின்னர் திடீரென தனது துப்பாக்கியால் 6 முறை சுட்டார்.

இந்த நடவடிக்கையின்போது 2 போலீஸார் உள்பட 3 பேர் காயமடைந்தனர். இறுதியில் அவரை சுட்டுக் கொன்று குழந்தைகளை மீட்டோம்” என்றார்.

இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலர் (உள்துறை) அவனிஷ் அவஸ்தி கூறும்போது, “8 மணி நேரத்தில் 23 குழந்தைகளையும் மீட்டுவிட்டோம். தப்பியோட முயன்ற சுபாஷ் பாத்தமின் மனைவி மீது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் கல்வீசித் தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார்” என்றார்.

ரூ.10 லட்சம் பரிசு

குழந்தைகளை உயிருடன் மீட்டதற்கு போலீஸாருக்கு, உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையையும், போலீஸாருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in