Published : 31 Jan 2020 08:54 PM
Last Updated : 31 Jan 2020 08:54 PM

உ.பி. குழந்தைகள் கடத்தலில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட கொலையாளியின் மனைவி கல்லால் அடித்து கொலை: உள்ளூர் மக்கள் ஆத்திரம்

உ.பி.யின் கிராமம் ஒன்றில் குழந்தைகளை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்த குற்றவாளி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட பிறகு உள்ளூர் மக்கள் குற்றவாளியின் மனைவி மீது நடத்திய தாக்குதலில் காயமடைந்து அவரும் பலியானார்.

உ.பி. ஃபரூக்காபாத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பரபரப்பான இந்தச் சம்பவத்தில் குற்றவாளி தன் மகளுக்கு பிறந்த தினம் கொண்டாடுவதான சாக்கில் கிராமத்தில் உள்ள குழந்தைகளைத் தன் வீட்டிற்கு அழைத்து அவர்களையும், தன் மனைவியையுமே துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளாக பிடித்து வைத்த சம்பவத்தில் 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு குற்றவாளி சுபாஷ் பாதம் போலீஸ் நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

23 குழந்தைகளும் மீட்கப்பட்டனர், இந்தச் சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் கடும் கோபத்திலும் ஆத்திரத்திலும் இருந்தனர். என்கவுண்ட்டர் முடிந்த நிலையில் உள்ளூர்வாசிகள் கடத்தல் காரனின் மனைவியை செங்கலால் அடித்துத் தாக்கினர். இதில் பலத்தக் காயமடைந்த அவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

சுபாஷ் பாதமின் கடத்தல் திட்டத்தில் மனைவிக்கும் பங்கிருந்ததா என்பது தெரியவில்லை, ஆனால் போலீஸார் அவ்வாறு சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் என்கவுண்ட்டர் முடிந்த போது குற்றவாளியின் மனைவி சம்பவ இடத்திலிருந்து தப்பிக்கப் பார்த்ததாகவும் அப்போது மக்கள் அவர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவரைப் போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.

“அவர் ஓடப்பார்த்தார், ஆனால் மக்கள் அடித்ததில் தலையில் கடுமையான காயமடைந்ததில் அவர் பலியானார்” என்று மூத்த போலீஸ் அதிகாரி தனியார் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x