

பிரதமர் நரேந்திர மோடியைக் களங்கப்படுத்தியது தொடர்பாக பள்ளி மீது தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்கில் ஒரு மாணவரின் தாயும், பள்ளித் தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.
மாவட்டத் தலைமையக நகரமான பிதரில் அமைந்துள்ள ஷாஹீன் பள்ளியில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி சிஏஏ மற்றும் என்சிஆர் ஆகியவற்றை விமர்சிக்கும் ஒரு நாடகத்தை நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் அரங்கேற்றினர்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
''சமூக சேவகர் நீலேஷ் ரக்ஷியால் என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ''குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசியப் பதிவு தொடர்பாக மோடியை அவதூறு செய்யும் நாடகத்தை நிகழ்த்த முடிவு செய்து பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களைப் பயன்படுத்தியுள்ளனர். சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தப்பட்டால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று பள்ளி நிர்வாகம் முஸ்லிம்களிடையே அச்சத்தை ஏற்படுத்த முயன்றது'' என்று தெரிவித்திருந்தார்.
சமூக சேவகர் நீலேஷ் ரக்ஷியால் அளித்த புகாரின் அடிப்படையில் ஜனவரி 26-ம் தேதி அன்று அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகளுடன் சேர்த்து, பள்ளிக்கு எதிராக ஒரு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பிரதமருக்கு எதிரான சொற்கள் அசல் ஸ்கிரிப்டின் ஒரு பகுதியாக இல்லை. ஆனால், ஆறாம் வகுப்பு மாணவரின் தாயார் அவற்றை ஒத்திகையின்போது இணைத்ததாகக் கூறப்படுகிறது, மேலும் பள்ளித் தலைமை ஆசிரியையும் அதை நாடகத்தின் ஒரு பகுதியாக இருக்க அனுமதித்தார்.
அதில் மோடியை குறித்து மோசமாகச் சித்தரிக்கப்பட்ட நிலையில் இந்நாடகம் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு வைரலானது.
ஷாஹீன் பள்ளியின் சில ஊழியர்கள் மற்றும் இரு பெண் ஊழியர்களை அவர்கள் விசாரித்த பின்னர், நேற்று அவர்கள் ஷாஹீன் பள்ளித் தலைமை ஆசிரியையும் ஒரு மாணவனின் தாயாரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது''.
இவ்வாறு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.