Last Updated : 31 Jan, 2020 04:36 PM

 

Published : 31 Jan 2020 04:36 PM
Last Updated : 31 Jan 2020 04:36 PM

23 குழந்தைகளை மீட்ட உபி. போலீஸாருக்கும் மாநில முதல்வருக்கும் அமித்ஷா பாராட்டு

பிணைக் கைதிகளாக 23 குழந்தைகளை பிடித்து வைத்திருந்த குற்றவாளியைச் சுட்டுக்கொன்று குழந்தைகளை மீட்ட உபி. போலீஸாருக்கும் முதல்வருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஃபாரூகாபாத்தில் வியாழக்கிழமை மாலை கசரியா கிராமத்தில் பணயக்கைதிகள் நாடகம் தொடங்கியது, கொலை குற்றம் சாட்டப்பட்ட சுபாஷ் பாதம், உள்ளூரைச் சேர்ந்த குழந்தைகளை தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்தார். அப்போது இதுவே தக்க நேரமெனக் கருதிய சுபாஷ் பாதம், தனது மகளின் பிறந்தநாளுக்கு வந்த 23 குழந்தைகளைப் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டார்.

இது நேற்று மாலை 5.45 மணியளவில் தொடங்கி சுமார் எட்டு மணி நேரம் தொடர்ந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் அவசர சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஆரம்பத்தில் ஆறு மாத சிறுமியை ஒரு பால்கனியில் இருந்து தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒப்படைத்து விடுவதாகக் கூறினார். மனநிலை சரியில்லாமல் போன பாதம், ஆறுமாத பெண்குழந்தையை மட்டும் ஒரு பால்கனியில் இருந்து தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒப்படைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவருடன் போலீஸார் பேச முயன்ற போது அந்த நபர் வீட்டினுள் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார், மேலும் ஒரு நபர் மற்றும் இரண்டு போலீஸ்காரர்கள் குண்டடி பட்டனர். குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்திருக்க வேண்டிய குற்றம் சாட்டப்பட்டவரின் நோக்கம் உடனடியாக அறியப்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டின்போது குழந்தைகளை பிணைக் கைதியாக வைத்தருந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னரே அனைவரும் மீட்கப்பட்டனர். இதில் கோபம் அடைந்த கிராம வாசிகள் குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவியைக் கடுமையாக தாக்கினர். மருத்துவமனைக்கு கொண்டுசென்ற பிறகு சிகிச்சைப் பலனளிக்காமல் அவரும் உயிரிழந்தார்.

அமித்ஷா பாராட்டு

இச்சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது ட்விட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''உத்தரப் பிரதேசத்தின் ஃபாரூகாபாத்தில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அனைத்து குழந்தைகளையும் காவல்துறையினரின் திறமையான தந்திரங்கள் மற்றும் திட்டமிடல் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளது பாராட்டத்தக்கது. முதலமைச்சர் மற்றும் உத்தரபிரதேச காவல்துறையை நான் வாழ்த்துகிறேன்.''

இவ்வாறு உள்துறை அமித்ஷா தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

யோகி நன்றி ட்வீட்

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ட்விட்டரில் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

''மாண்புமிகு உள்துறை அமைச்சருக்கு நன்றி. ஆம், உத்தரப்பிரதேச அரசு, குற்றங்களுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூகத்தின் பிற பலவீனமான மக்களுக்கு எதிரான குற்றங்களை எக்காரணத்தைக் கொண்டும் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்கள் காவல்துறையினர் 23 குழந்தைகளை குற்றவாளியிடமிருந்து விடுவித்த தைரியமும் முயற்சிகளும் பாராட்டத்தக்கது. உங்கள் வழிகாட்டுதலின் கீழ், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு தீர்மானிக்கப்படுகிறது, மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பை வழங்க எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறது''

இவ்வாறு உ.பி.முதல்வர் யோகி ஆதித்நாத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x