

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டுக்கான (2019-2020) பொருளாதார ஆய்வறிக்கையை, நாடாளுமனறத்தில் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் இந்த அறிக்கையில் இடம் பெறும்.
இதையடுத்து 2020-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை (பிப். 1) தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவில் 5 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் பட்ஜெட் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியிடப் பட உள்ளது.
2020-ம் ஆண்டுக்கான நாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டம் இன்று தொடங்கி பிப்ரவரி 11 வரை நடைபெற உள்ளது. இதையடுத்து இரண்டாவது கட்டம் மார்ச் 2-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரு கூட்டத்தொடர்களுக்கும் இடையே 19 நாட்கள் இடைவெளி உள்ளது.