இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு: கேரள மாணவிக்கு தீவிர சிகிச்சை

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாணவி சிகிச்சை பெற்றுவரும் திருச்சூர் மருத்துவமனை.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாணவி சிகிச்சை பெற்றுவரும் திருச்சூர் மருத்துவமனை.
Updated on
1 min read

கரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டுள்ள முதல் நோயாளியான கேரள மாணவி திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவரது உடல்நிலை மேம்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் கரோனா என்ற ஆபத்தான வைரஸ் 15 நாட்களுக்கு முன்பாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, சீனாவில் இதுவரை 170-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் அனைத்துப் பயணிகளும் கடுமையாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவிலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சோதனையில் கேரள மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டயறிப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது,

ஜனவரி 22 ஆம் தேதி தான் இந்த பெண் பெய்ஜிங்கிலிருந்து கொல்கத்தா வந்தார். அவர் அங்கிருந்து ஜனவரி 23 அன்று கொல்கத்தாவிலிருந்து ஒரு தனியார் விமான விமானத்தில் கொச்சினுக்கு வந்தார்.

அவருடன் பயணித்த அனைத்துப் பயணிகளையும் தொடர்புகொள்வதென சுகாதாரத்துறை முடிவுசெய்துள்ளது.

திரிச்சூர் வந்துள்ள கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி ஆய்வுகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதைக் காண மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், ''சீனாவின் வுஹானில் இருந்து இங்கு வந்த ஒரு பெண் மாணவிக்கு நாட்டில் முதன்முதலில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.

பரிசோதனையில் நோய் அறிகுறி தென்பட்ட முதல் நோயாளியான கேரள மாணவி திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவரது உடல்நிலை மேம்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் நோய் அறிகுறி இருப்பதாக என சந்தேகிக்கப்படும் 1,053 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர், மேலும் 15 பேர் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், ''மக்களை பீதியடைய வேண்டாம் எனவும் ஆனால் வைரஸின் ஆபத்துகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும், தேவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்'' எனவும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in