Published : 31 Jan 2020 09:46 AM
Last Updated : 31 Jan 2020 09:46 AM

பலாத்கார கொலைக் குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனை: 45 நாட்களில் தெலங்கானா சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

2019-ம் ஆண்டு நவம்பரில் தலித் பெண் ஒருவரை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்து தெலங்கானா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதிலாபாத் மாவட்ட நீதிபதி எம்.ஜி.பிரியதர்ஷினி ‘அரிதிலும் அரிதானது’ என்று இந்தக் குற்றத்தை வர்ணித்தார்.

குற்றவாளிகள் 3 பேரும் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

“எல்லப்பத்தர் கிராமத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் ஷெய்க் பாபு, ஷெய்க் ஷாபுதின், ஷைக் மக்தூம் ஆகியோர் அனைத்துக் குற்றங்களிலும் ஈடுபட்டது உறுதியாகிறது” என்று கூறிய கூடுதல் அரசு வழக்கறிஞர் எம்.ரமணா ரெட்டி, இவர்களுகு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தலித் பெண் பலாத்கார கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 45 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலித் அமைப்புகளிடமிருந்து இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் குவிந்து, பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன.

பலாத்காரம் மற்றும் கொலையில் சிக்கிய அந்த 30 வயது தலித் பெண் பெடா புடகா ஜங்கலு சாதிப்பிரிவைச் சேர்ந்தவர். இவர் பலூன்களை விற்று பிழைப்பு நடத்தி வந்தவர். மிகவும் ஏழையான இவரை இந்த 3 பேரும் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி பலாத்காரம் செய்து கொலை செய்தனர்.

நவம்பர் 27ம் தேதி போலீஸார் மூவரையும் கைது செய்தனர். கடும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியதோடு இதன் பிறகு நடந்த திஷா பாலியல் பலாத்கார எரிப்புக் கொலைச் சம்பவமும் நடைபெற விரைவு கதியில் நீதி வழங்க கோரிக்கைகள் வலுத்தன.

இந்நிலையில் டிசம்பர் 11ம் தேதி கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வர, டிசம்பர் 24ல் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை டிசம்பர் 27ம் தேதி தொடங்கியது. சாட்சிகள் அன்றிலிருந்து விசாரிக்கப்பட்டனர்.

அரசு தரப்பு சுமார் 44 சாட்சியங்களை விசாரித்தது, மேலும் டிஎன்ஏ சோதனை அறிக்கைகள் மூலம் சந்தர்ப்ப சாட்சியங்களும் திரட்டப்பட்டன. சாட்சிகளை ஆராய்ந்த நீதிபதி மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

கொல்லப்பட்ட தலித் பெண்ணின் 2 மகன்களுக்கான பொறுப்பை தெலங்கானா அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. கணவர் தேகு கோபிக்கு வருவாய்த் துறையில் அட்டெண்டர் வேலையும் அளிக்கப்பட்டுள்ளது. இதோடு நிவாரணமாக 3 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x