Published : 31 Jan 2020 08:19 AM
Last Updated : 31 Jan 2020 08:19 AM

ஆந்திர தலைநகருக்கு விசாகப்பட்டினம் ஏற்றதா?- முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜின்.என். ராவ் விளக்கம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம் கட்ட ஜெகன் அரசு தீர்மானித்துள்ளது. இந்நிலையில், விசாகப்பட்டினம் தலைநகருக்கு ஏற்றது அல்ல என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜின்.என்.ராவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு அமராவதியில் சட்டமன்றம், விசாகப்பட்டினத்தில் தலைமை செயலகம், ஆளுநர் மாளிகை, கர்னூலில் உயர் நீதிமன்றம் அமைக்கலாமென அரசு நியமனம் செய்த ஜி.என். ராவ் தலைமையிலான கமிட்டி அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின்படி ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பது என ஜெகன் அரசு அறிவித்தது. அதுமட்டுமின்றி, இதற்காக அமைச்சரவை ஒப்புதலும் பெற்று, சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானம் மேலவையில் நிறைவேறவில்லை.

இதன் காரணமாக, மேலவையை ஜெகன்மோகன் ரெட்டி ரத்து செய்தார். அமராவதியில் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள் பினாமி பெயர்களில் விவசாயிகளிடமிருந்து நிலங்கள் வாங்கி குவித்துள்ளதாகவும் ஜெகன் அரசு குற்றம் சாட்டி, இதனை காரணம் காட்டி தற்போது 3 தலைநகரம் அமைக்க ஜெகன் அரசு முன் வந்துள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.என். ராவ் தலைமையிலான ஒரு கமிட்டியை ஆந்திர அரசு நியமனம் செய்தது. இந்த கமிட்டி வெறும் ஆறு நாட்களிலேயே ஜெகன் கூறியதுபோன்று, 3 தலைநகரங்கள் அமைக்கலாம் என அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.

இதற்கு சந்திரபாபு நாயுடு மற்றும் அமராவதியில் உள்ள 29 கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்தக் கோரிக்கையை முதல்வர் ஜெகன் ஏற்க மறுத்து விட்டார். மாநிலம் முழுவதும் ஒரே சீராக வளர்ச்சி அடைய 3 தலைநகரங்களை அமைத்தே தீருவது என உறுதிபட கூறி வருகிறார். இந்நிலையில், ஜி என்.ராவ் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையில், விசாகப்பட்டினத்தில் அடிக்கடி புயல், கடும் மழை வருவதால் இந்த இடம் தலைநகருக்கு ஏற்றது அல்ல என கூறியிருப்பதாக தகவல்கள் பரவியது. இதற்கான ஆதாரங்களையும் சிலர் வெளியிட்டனர். இதனால் நேற்று ஆந்திராவில் புதிய விவாதம் தலைத் தூக்கியது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், நேற்று முன்தினம், ஹைதராபாத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜிஎன். ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையி்ல், ‘‘விசாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரம் தலைமை செயலகம் கட்ட வேண்டாமெனவும், ஒரு 50. கி.மீ தொலைவில் கட்டலாமெனவும் எனது அறிக்கையில் கூறியுள்ளேன். நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்தை சேர்ந்த நிபுணர்கள் எனது கமிட்டியில் உள்ளனர். ஆதலால், நாங்கள் பார்த்ததை, விசாரித்து அறிக்கையாக அளித்தோம். அதனை ஏற்றுக்கொள்வதோ, மறுத்து விடுவதோ அது அரசு எடுக்கும் நடவடிக்கையில்தான் உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x