உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் பெங்களூரு; 4-வது இடத்தில் மும்பை; தலைநகர் டெல்லிக்கு 8-வது இடம்

உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் பெங்களூரு; 4-வது இடத்தில் மும்பை; தலைநகர் டெல்லிக்கு 8-வது இடம்
Updated on
2 min read

உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதலிடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த மும்பை சற்று, பின்தங்கி இந்த ஆண்டு 4-வது இடத்தில் உள்ளது.

உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு செய்யும் ‘டாம்டாம்’ டிராஃபிக் இன்டெக்ஸ் நிறுவனம், 2019-ம் ஆண்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டது. 6 கண்டங்களில் உள்ள 57 நாடுகளைச் சேர்ந்த 416 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவை அண்மையில் வெளியிட்டது.

அதில், உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் கர்நாடக தலைநகர் பெங்களூரு முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பெங்களூருவில் இரவு 7 முதல் 8 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சராசரியாக பெங்களூரு வாகன ஓட்டிகள் ஓர் ஆண்டில் 243 மணி நேரத்தை போக்குவரத்து நெரிசலில் சிக்கி வீணடிக்கிறார்கள். இங்கு மக்கள் போக்குவரத்து நெரிசலில் செலவிடும் நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக 71 சதவீத நேரத்தை செலவிடுகிறார்கள்.

பெங்களூருவில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அன்றைய தினம் 103 சதவீதத்தை தொட்டது. அதே ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி (சனிக்கிழமை) போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டதால் இந்த சதவீதம் 30% ஆக குறைந்தது. பெங்களூருவை பொறுத்தவரை இரவு 8 மணிக்கு மேல் பயணித்தால் ஒரு வருடத்தில் சுமார் 5 மணி நேரத்தை சேமிக்க முடியும்.

பெங்களூருவுக்கு அடுத்த இடத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 71 சதவீத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 3-வது இடத்தில் கொலம்பியா நாட்டின் போகோடா நகரில் 68 சதவீதம் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் இடத்தில் இருந்த மும்பையில் 2019-ம் ஆண்டு போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து 4-வது இடத்தில் உள்ளது. இங்கு 65 சதவீதமும், 5-வது இடத்தில் உள்ள புனே நகரில் 59 சதவீதம் கூடுதல் நேரத்தையும் போக்குவரத்து நெரிசலிலேயே மக்கள் செலவிடுகிறார்கள்.

இந்தப் பட்டியலில் 8-வது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது. டெல்லி மக்கள் ஆண்டுக்கு 7 நாட்கள் 22 மணி நேரத்தை போக்குவரத்து நெரிசலில் இழக்கிறார்கள். உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவில் பெங்களூரு (71%), மும்பை (65%), புனே (59%),டெல்லி (56%) ஆகிய 4 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

உலக அளவில் கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும், 2019-ம் ஆண்டு போக்குவரத்து நெரிசல் 239 நகரங்களில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் 63 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in