Published : 31 Jan 2020 06:46 AM
Last Updated : 31 Jan 2020 06:46 AM

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்குகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். இதையடுத்து 2020-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை (பிப். 1) தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவில் 5 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் பட்ஜெட் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியிடப் பட உள்ளது.

2020-ம் ஆண்டுக்கான நாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டம் இன்று தொடங்கி பிப்ரவரி 11 வரை நடைபெற உள்ளது. இதையடுத்து இரண்டாவது கட்டம் மார்ச் 2-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரு கூட்டத்தொடர்களுக்கும் இடையே 19 நாட்கள் இடைவெளி உள்ளது.

அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அது பற்றி நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:

இந்தக் கூட்டத்தொடரில் பொரு ளாதார பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தற்போதைய உலக சூழலில் இந்தியா எப்படி பயன்பெற முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு பிரச்சினையிலும் முழுமையான அலசலுடன் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டம் தொடர் பாக நாடு முழுவதும் நடை பெறும்போராட்டங்கள், பொருளாதார நிலவரம், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை இக்கூட்டத்தில் எதிர்க் கட்சிகள் எழுப்பின. காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன. எல்லா பிரச்சினைகள் பற்றியும் விரிவாக விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

நாட்டின் தற்போதைய பொரு ளாதார நிலை குறித்து இந்தக் கூட்டத்தொடரில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்போது, “பட்ஜெட் கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பங்கேற்கும் வகையில் அவரை உடனே விடுதலை செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன” என்றார்.

டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்கள் கோபமூட்டும் வகையில் பேசிவரும் நிலையில், இதில் பிரதமர் தலையிடவேண்டும் என கோரிக்கை விடுத்ததாக காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

திமுக தரப்பில் பங்கேற்ற டி.ஆர்.பாலு இதர எதிர்க்கட்சிகளின் கருத்துகளை பகிர்ந்துகொண்டார். தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றியும் அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x