நாடாளுமன்ற துளிகள்

நாடாளுமன்ற துளிகள்
Updated on
1 min read

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு கேள்விகள் மற்றும் விவகாரங்கள் குறித்து அமைச்சர்களின் பதில்கள்:

ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக்:

நாடு முழுவதும் 2034 யோகா பயிற்சியாளர்கள் முறைப்படி பதிவு செய்துள்ளனர். இதில் மிக அதிகபட்சமாக தமிழகத்தில் 751 யோகா பயிற்றுநர்கள் உள்ளனர். கர்நாடகாவில் 609 யோகா பயிற்றுநர்கள் உள்ளனர்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:

நாடு முழுவதும் 60 முக்கிய நகரங்களில் நாளொன்றுக்கு 5501 டன் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிகின்றன. மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி கோரி சுமார் 450-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன. காற்று மாசுவால் தாஜ்மஹால் பாதிக்கப்படுகிறது. காற்று மாசால் பாதிக்கப்படும் வேறு வரலாற்று சின்னங்கள் குறித்து இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை.

உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி:

தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தின்படி கடந்த 2014-ம் ஆண்டில் நாடு முழுவதும் பத்திரிகையாளர்களை தாக்கியதாக 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிக அதிகபட்சமாக 63 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கும் திட்டம் இல்லை.

சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா:

தேசிய குடும்ப சுகாதார புள்ளிவிவரத்தின்படி கிராமங்களில் வாழும் பெண்கள், குழந்தைகளில் 50 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பழங்குடி மக்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது.

நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா:

நாடு முழுவதும் கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.136.43 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்க ரூபாய் நோட்டுகளில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in