

சபரிமலையில் பெண்கள் அனுமதிப்பது உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிரான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பிப்ரவரி 3-ம் தேதி மீண்டும் விசாரிக்கிறது.
இந்த வழக்கில் உள்ள சட்டச் சிக்கல்கள், பிரச்சினைகள், கேள்விகள் குறித்து 4 மூத்த வழக்கறிஞர்கள் கருத்தொற்றுமையுடன் பேசி அறிக்கை அளிக்க நீதிபதிகள் கேட்டிருந்தனர். ஆனால் வழக்கறிஞர்களுக்கு இடையே கருத்தொற்றுமை வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால், நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதியில்லை. இந்த நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 7 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
சபரிமலை விவகாரம் மட்டுமின்றி, மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, பார்சி பெண்கள் வேறு சமுதாய ஆண்களைத் திருமணம் செய்யும்போது அவர்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது குறித்து புதிய அமர்வு விசாரிக்கும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சபரிமலை வழக்கை 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்றும் ஜனவரி 13-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது.
இதன்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், சந்தானகவுடர், எஸ்.ஏ.நசீர், சுபாஷ் ரெட்டி, கவாய், சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய 9 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த 13-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, "இந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்துள்ள 4 மூத்த வழக்கறிஞர்கள் மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்குக் காட்டப்படும் பாகுபாடு, சபரிமலை விவகாரம் ஆகியவை குறித்த பிரச்சினைகளை ஒன்றுகூடி பேசி எங்களிடம் தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் பிஆர் காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன் கடந்த 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா கூறுகையில், "நீதிமன்றம் முன்கூட்டி கூறியதைப் போல், வழக்கறிஞர்கள் சந்தித்துப் பேசி பொதுவான கேள்விகளை ஆராய அறிவுறுத்தியது.
ஆனால், எங்களால் பொதுவான கேள்விகளை ஆலோசிக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றமே கேள்விகளை வகுக்கலாம். மற்ற வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து பேசுகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதற்குத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு கூறுகையில், "இந்த வழக்கில் நாங்கள் விசாரிக்கப்போகும் கேள்விகள் அனைத்தும் சட்டபூர்வமானவை. இந்த வழக்கை விசாரிக்க அதிகமான காலம் எடுத்துக்கொள்ளமாட்டோம். அதிகபட்சமாக 10 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளமாட்டோம். சிலர் அதற்கு அதிகமான கால அவகாசம் கேட்டால், அதற்கு நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம்" எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் பிஆர் காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
அப்போது மூத்த வழக்கறிஞர் வி.கிரி வாதிடுகையில், "இந்த வழக்கில் வாதிடும் சில வழக்கறிஞர்கள் சட்டபூர்வமான சில விஷயங்களைத் தயார் செய்து அளித்துள்ளோம். அதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஆனால், மூத்த நீதிபதிகள் 4 பேரை இந்த வழக்கு தொடர்பாக அமர்ந்து பேசி வழக்கில் உள்ள சட்டச் சிக்கல்கள், பிரச்சினைகள் குறித்து கருத்தொற்றுமையுடன் பேசி அறிக்கை அளியுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், வழக்கறிஞர்களுக்கு இடையே எந்தவிதமான கருத்தொற்றுமையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதை அறிந்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் அமர்வு கூறுகையில், "இந்த வழக்கு தொடர்பாக சட்டச் சிக்கல்கள், பிரச்சினைகளைக் கருத்தொற்றுமையுடன் ஆய்வு செய்து கூறுங்கள் என்று மூத்த வழக்கறிஞர்களிடம் தெரிவித்திருந்தோம். ஆனால், கருத்தொற்றுமை வராதது எங்களுக்கு வேதனையளிக்கிறது.
இருப்பினும் இந்த வழக்கில் வாதிடும் மற்ற சில வழக்கறிஞர்கள் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்கள். அதைக் கருத்தில் எடுத்துக் கொண்டு வரும் பிப்ரவரி 3-ம் தேதி 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரிக்கும். அப்போது இந்த வழக்குத் தொடர்பான பிரச்சினைகளை, சிக்கல்களை நீதிபதிகளே முடிவு செய்வார்கள். அதன்பின் விசாரணை எப்போது இருந்து தொடங்கும் என அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.