வங்கிகள் செயல்படாது: 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வங்கிகள் செயல்படாது: 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
Updated on
1 min read

ஊதிய உயர்வு தொடர்பான வங்கி நிர்வாகத்தினருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்யப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் வங்கிகள் இயங்காது, அதன்பின் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை என்பதால், 3 நாட்களுக்கு வங்கிச் சேவை இருக்காது. பிப்ரவரி 1-ம் தேதி (சனிக்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே 2 நாட்களுக்கு வங்கிச் சேவை பாதிக்கும் எனத் தகவல் தெரிவித்துள்ளன. இந்தப் போராட்டம் காரணமாக, பணம், செக், டிடி பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் செயல்பட வேண்டும்; 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து இந்திய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி), அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (ஏஐபிஇஏ), தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு (எஓபிடபிள்யு) ஆகியவை பங்கேற்கின்றன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சி.ஹெச் வெங்கடாச்சலம் நிருபர்களிடம் கூறுகையில், " 2017 நவம்பர் மாதத்தில் இருந்து வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பேச்சு நடத்தப்படவில்லை. இந்திய வங்கி கூட்டமைப்புடன் நடத்திய பேச்சும் தோல்வியில் முடிந்தது. அதனால் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in