

சமையல் கேஸ் சிலிண்டர்களுக்காக எண்ணெய் நிறுவனங்களுக்கான மானியத்தை 2022-ம் ஆண்டு தொடக்கத்துக்குள் நிறுத்த மத்திய அ ரசு திட்டமிட்டுள்ளதால், அடுத்து வரும் ஆண்டுகளில் சிலிண்டர் விலை ரூ.150 வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மானியமாக சிலிண்டர் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.150 வரையிலான தொகையை எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக ஓராண்டில் சிலிண்டர் விலையில் ஏற்றிக் கொள்ள மத்தியஅரசு அனுமதி வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரை மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை வழங்குகிறது. இந்த 12 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுவோர் வெளிச்சந்தையில் விற்கப்படும் விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும். மக்களுக்கு மானியமாக வழங்கும் சிலிண்டருக்கான விலையில் ஏற்படும் இழப்புத் தொகையை அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு தற்போது வழங்குகிறது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் மானியத்தை படிப்படியாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள சூழலைப் பயன்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் சிலிண்டர் விலையை உயர்த்திக்கொள்ள அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது
2019-ம் ஆண்டு ஜூலை முதல் 2020 ஜனவரி வரை எண்ணெய் நிறுவனங்கள் சராசரியாக மாதத்துக்கு 10 ரூபாயை உயர்த்தியுள்ளன. அதாவது ஒரு சிலிண்டருக்கு 63 ரூபாய் அதிகரித்துள்ளது.
2022-ம் ஆண்டுக்குள் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் ஒட்டுமொத்த மானியத்தையும் நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது மானியமாக அரசு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.150 வரையிலான மானியத் தொகை விலையேற்றமாக மக்கள் தலையில் ஏற்றப்படலாம்.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இந்த விலைக் குறைவை அரசு பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. அதாவது மானியைத்தை ரத்து செய்யும் விதமாக, எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் இழப்பை சிலிண்டர் விலையை உயர்த்தி குறைத்துக் கொள்ள அரசு அனுமதிக்க ஆலோசித்து வருகிறது.
அதாவது தற்போது மானியமாக மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வரும் தொகை 2022-ம் ஆண்டு தொடக்கத்துக்குள் அல்லது ஓராண்டுக்குள் நிறுத்தப்பட்டுவிடும். அதாவது ஓராண்டுக்குள் எண்ணெய் நிறுவனங்கள் மானியத் தொகை முழுவதையும் சிலிண்டர் விலையில் ஏற்றிவிட்டால் மானியம் வழங்கத் தேவையில்லை.
அதாவது மாதத்துக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்த்தினால், அடுத்த 15 மாதங்களில் சிலிண்டர் ஒன்றுக்கான இழப்பு அனைத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுகட்டிவிடும். அதன்பின் மத்திய அரசிடம் இருந்து உதவி ஏதும் பெறத் தேவையில்லை
தற்போது மானிய விலையில் வழங்கப்படும் ஒரு சிலிண்டர் (14.2கிலோ) விலை ரூ.557க்கு வழங்கப்படுகிறது, மானியமாக ரூ.157 வழங்கப்படுகிறது. இந்த மானியத் தொகை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்தால், மானியங்களின் அளவும் குறையும்" எனத் தெரிவிக்கின்றன.
2019-ம் ஆண்டு முடிவில் எண்ணெய் நிறுவனங்கள் அரசிடம் இருந்து எல்பிஜி சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகியவற்றை மானிய விலையில் வழங்குவதால் ஏற்படும் இழப்புக்காக ரூ.34,500 கோடியை அரசிடம் இருந்து பெற்றுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த இழப்பில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் 2019-ம் ஆண்டில் ஏறக்குறைய ரூ.43,300 கோடி மீண்டுள்ளன. இதில் சிலிண்டருக்கு மட்டும் ரூ.31,500 கோடி இழப்பு சரிகட்டப்பட்டுள்ளது.