Last Updated : 30 Jan, 2020 04:48 PM

 

Published : 30 Jan 2020 04:48 PM
Last Updated : 30 Jan 2020 04:48 PM

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிஏஏ, பொருளாதார விஷயங்களை எழுப்பிய எதிர்க்கட்சிகள்: ஆலோசிக்கத் தயார்; பிரதமர் மோடி

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் டெல்லியில் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும், பொருளாதார வீழ்ச்சி குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, அனைத்து விஷயங்களையும் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆலோசிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

சனிக்கிழமையன்று 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடக்கிறது.

டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் : படம் | ஏஎன்ஐ.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரை ஆக்கபூர்வமாகக் கொண்டு செல்லும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 26 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்க நிலை, வளர்ச்சிக் குறைவு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசுவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் விவாதங்களில் பங்கெடுப்பதோடு நிறுத்தவிடக்கூடாது. ஆக்கபூர்வமான விவாதங்களில் ஒவ்வொரு எம்.பி.யும் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பொருளாதார விவகாரங்கள் குறித்தும், பொருளாதார வீழ்ச்சி குறித்தும் எதிர்க்கட்சியினர் ஆலோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை பிரதமர் மோடி வரவேற்றார். அவர்களின் ஆலோசனைகளையும் வரவேற்பதாக மோடி தெரிவித்தார்.

புத்தாண்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதால், நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்க எம்.பி.க்கள் வழிகாட்ட வேண்டும், நாட்டின் நலனுக்காக ஆலோசனைகள் வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் .

கடந்த இரு கூட்டத்தொடர்களும் ஆக்கபூர்வமாகச் சென்றதால், இந்தக் கூட்டத்தொடரையும் அதுபோல கொண்டு செல்லவேண்டும் என்று பிரமதர் மோடி கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சிகள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாகவும், பொருளாதாரச் சூழல் குறித்தும் பேச ஆலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதற்கு அனைத்துப் பிரச்சினைகளையும் பேசுவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி அறிவித்தார்".

இவ்வாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

இந்தக் கூட்டம் முடிந்த பின், காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில், "காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவரைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கேட்டுக் கொண்டோம்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைவர்கள் சிலர் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் பேசுகிறார்கள் என்று தெரிவித்தோம். அதைக் கவனிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக எழும் போராட்டங்கள் அரசின் கவனத்தைத் திருப்பக் கொண்டு வரப்படுகிறது. ஆனால், அரசு அகங்காரத்துடன் அதை அடக்க நினைக்கிறது. அவர்களின் குறைகளைக் கேட்க மறுக்கிறது. பொருளாதாரச் சூழல் மோசமாக இருக்கிறது. ஜிடிபி குறைந்துவிட்டது, வேலையின்மை அதிகரித்து வருகிறது என்பதைக் குறித்துத் தெரிவித்தோம். அதுமட்டுமல்லாமல் கூட்டத்தொடர் நடக்கும் நாட்களின் அளவையும் மத்திய அரசு குறைத்துவிட்டதாகவும் தெரிவித்தோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x