

நாங்கள் நினைத்தால் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை இந்துஸ்தான் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றுவோம் என்று உ.பி.அமைச்சர் ரகுராஜ் சிங் பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
உத்தரப் பிரதேச அரசில் உணவு அமைச்சராக இருப்பவர் ரகுராஜ் சிங், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின்போது மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினால் உயிரோடு புதைத்துவிடுவேன் என்று ஏற்கெனவே இவர் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இப்போது மீண்டும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடர்பாகவே இன்னொரு கருத்தை கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதன் கிழமை அலிகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் கூறியதாவது:
நாங்கள் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டுமென நினைத்தால் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் என்று மாற்றிவிட முடியும். தேச விரோத செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நாயைப் போன்ற மரணம்தான் அளிக்கப்படும். என்கவுன்டரில் இதுபோன்றவர்களை உடனடியாகக் கொல்லுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது''
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இப்படி பேசியது குறித்து அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ''தேசவிரோதிகளைத்தான் அப்படி சொன்னேன் என்றார். மேலும் எதிரிகளை உயிரோடு கொன்று புதைப்போம் என்று சொன்னதற்காகவே நான் கவலைப்பட்டதில்லை'' என்றார்.
இதுகுறித்து பேசிய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (ஏஎம்யூஎஸ்யூ) முன்னாள் தலைவர் எம். சல்மான் இம்தியாஸ், ''பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்து அதில் தலையிட விரும்பும் பாஜகவின் மனநிலையை இது பிரதிபலிக்கிறது'' என்றார்.
மோசமான நிலையில் பல்கலைக்கழகம்
இதற்கிடையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் புதன்கிழமை நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது, மாணவர்கள் சிஏஏவை எதிர்த்து வகுப்புகளை புறக்கணித்ததாகவும் பல்கலைக்கழகத்தின் சீனியர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பெண் மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்ததால் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட ஜாகிர் ஹுசைன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளும் தேர்வுகள் நடைபெறவில்லை, மாணவர்கள் மீண்டும் நுழைவாயிலில் யாரும் செல்லாதவாறு தடுத்துநின்றனர்.
பல்கலைக்கழக நடவடிக்கைகள் மெல்ல மெல்ல முடக்கப்பட்டு வருவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூர் கவலை தெரிவித்துள்ளார்.