Last Updated : 30 Jan, 2020 04:01 PM

 

Published : 30 Jan 2020 04:01 PM
Last Updated : 30 Jan 2020 04:01 PM

நிர்பயா குற்றவாளி அக்சய் குமார் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்: இன்னும் ஒரு வாய்ப்பு

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது.

குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே குற்றவாளி அக்சய் குமார் உச்ச நீதிமன்றத்தில் தனது தண்டனையை எதிர்த்து சீராய்வு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அந்த மனுவில் " பாலியல் பலாத்கார வழக்கிற்கு தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என்று தீர்ப்பில் இருக்கிறது. ஆனால், பொதுமக்கள், பெண்கள் உரிமைக்காகப் போராடுவோர் ஆகியோரின் நெருக்கடியால் எங்களுக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. இதைப் பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அமர்வு முன் வாய்மொழியாக விசாரணை செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "குற்றவாளி தாக்கல் செய்த சீராய்வு மனு, அது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தோம். எங்கள் கருத்தின்படி ரூபா அசோகா ஹூரா மற்றும் அசோக் ஹூரா ஆகியோரின் 2002-ம் ஆண்டு வழக்கில் சீராய்வு மனுவை விசாரித்த முகாந்திரத்துக்குள் இந்த வழக்கு வரவில்லை.

குற்றவாளி தாக்கல் செய்த மனுவை வாய்மொழியாக விசாரித்ததில் அதைத் தள்ளுபடி செய்கிறோம். தூக்கு தண்டனைக்குத் தடை விதிக்கக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தனர்.

சீராய்வு மனுதான் உச்ச நீதிமன்றத்தின் கடைசி சட்டக் கதவாகும். அது அக்சய் குமாருக்கு அடைக்கப்பட்டுவிட்டது. இனிமேல், அவர் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே கருணை மனு செய்ய வேண்டிய வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கெனவே முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா ஆகியோர் சீராய்வு மனுத் தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. வினய் குமாருக்கு அனைத்து விதமான சட்டக் கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இதில் 4-வது குற்றவாளியான பவன் குப்தா மட்டும் இன்னும் சீராய்வு மனுத் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x