

டெல்லியில் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழகம் அருகே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி நடைபெற்றது, அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ‘இங்குதான் உங்கள் சுதந்திரம் உள்ளது’ என்று கூறிய படியே கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நபர் இங்குதான் சுதந்திரம் என்று கத்திக் கொண்டே துப்பாக்கியால் சுட்ட போது தலைக்கவசம், உள்ளிட்டவைகளுடன் ஆயுத போலீஸ் படை அங்குதான் நின்று கொண்டிருந்தது.
பாதுகாப்புப் பகுதியில் வெள்ளை பேண்ட் கருப்புச் சட்டை அணிந்த இந்த நபர் ‘இங்குதான் உங்கள் சுதந்திரம் உள்ளது’ என்று கத்திய படியே துப்பாக்கியை எடுத்து சுட்டார்.
இந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜாமியா மாணவர் ஆம்னா ஆசிப் இந்த சம்பவத்தை என்.டி.டிவிக்காக வர்ணிக்கையில், "நாங்கள் சாலைத்தடுப்பருகே நின்று கொண்டிருந்தோம் அப்போது எங்கிருந்தோ வந்த இவன் அமைதிப் பேரணியை குலைக்கும் வேலையில் ஈடுபட்டான். துப்பாக்கியுடன் முன்னேறி வந்தான், நாங்கள் அவனைச் சமாதானப் படுத்தினோம்.
அங்கு நின்று கொண்டிருந்த காவலர்களை அணுகி அவரை பிடிக்குமாறு கூறினோம், ஆனால் அவர்கள் பேசாமல் நின்று கொண்டிருந்தனர். பிறகுதான் நாங்கள் அவன் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்க முயன்ற போது எங்களில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டான்” என்றார்.
காயமடைந்த நபரின் பெயர் ஷதாப் ஃபரூக், இவரது இடது கையில் ரத்தம் கொட்டியது. இதனையடுத்து எய்ம்ஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.