Published : 30 Jan 2020 01:40 PM
Last Updated : 30 Jan 2020 01:40 PM

எனக்கு அளிக்கப்படும் பத்மஸ்ரீ விருதுக்கும் என் தந்தைக்கும் என்ன தொடர்பு?: இந்தியர் ஆன பாடகர் அத்னன் சமி வேதனை 

இந்தியக் குடியுரிமை பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர் அத்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்ததையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக மத்திய அரசை விமர்சித்ததோடு, அத்னன் சமியின் தந்தையையும் அவரது பாகிஸ்தான் ராணுவச் சேவைக்காகச் சாடியது.

பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பாடகர் அத்னன் சமிக்கு கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை வழங்கப்பட்டு, அவருக்கு இப்போது பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது 130 கோடி இந்தியர்களைப் புண்படுத்தும் செயல் என்று என்சிபி கட்சி தெரிவித்தது.

கார்கில் போரில் தேசத்துக்காகப் பங்கேற்று விருது பெற்று தற்போது அசாமில் என்ஆர்சி மூலம் வெளிநாட்டவர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர் முகமது சனானுல்லாவுக்கு ஏன் பத்மஸ்ரீ வழங்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அத்னன் சமிக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருது 130 கோடி இந்தியர்களை அவமானப்படுத்தும் செயல் என்று கண்டித்தது.

மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் யாரேனும் பிரதமர் மோடியைப் புகழ்ந்தால் அவர்கள் குடியுரிமையோடு, பத்மஸ்ரீ பட்டமும் பெறலாம் என்று எதிர்க்கட்சிகள் அத்னன் சமி பத்மஸ்ரீ விருதை எதிர்த்தன.

சமி இவர் 2016-ல் இந்தியக் குடியுரிமை பெற்றார். இதற்காக ‘வரம்பற்ற நன்றியை’ தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் தன் பத்மஸ்ரீ விருதையும், தன் தந்தை பாகிஸ்தான் ராணுவச் சேவையில் இருந்ததையும் விமர்சனங்களும் கேள்வியும் எழுந்து வருவதையடுத்து சமி, தன் விருதுக்கும் தந்தைக்கும் என தொடர்பு என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

இவரது தந்தை பாகிஸ்தான் விமானப்படை பைலட் என்பதால் விமர்சனம் எழுந்தது. இதனையடுத்தே அவர் என் விருதுக்கும் என் தந்தைக்கும் என்ன தொடர்பு என்று கேட்டுள்ளார்.

“என் தந்தை ஒரு கொண்டாடப்பட்ட ஒரு போர் விமானி, மேலும் அவர் தொழில்பூர்வமான ராணுவ வீரர், அவர் அவரது நாட்டுக்கான கடமையை ஆற்றினார். அதற்காக அவரை நான் மதிக்கிறேன், இது அவரது வாழ்கை, அதற்காக அவர் விருதும் பெற்றார்.

அதற்கான பயனையோ, பெருமையையோ நான் அடையவில்லை, அது போல்தான் நான் என்ன செய்கிறேன் என்பதற்கான பெருமையும் அவருக்குப் போகாது. என்னுடைய இந்த விருதுக்கும் என் தந்தைக்கும் என்ன தொடர்பு, அது சம்பந்தமில்லாதது.

விமர்சிப்பவர்கள் சிறிய அரசியல்வாதிகள். அவர்கள் ஏன் விமர்சிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அரசியல் திட்டமிருக்கிறட், அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நான் அரசியல்வாதியல்ல, நான் இசைத்துறையைச் சேர்ந்தவன்.

அரசுடனான அவர்களுடைய அரசியல் திட்டம், விவகாரங்கள் என் சம்பந்தப்பட்டது கிடையாது, என் பெயரை பயன்படுத்திக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.

நான் இதில் இழுக்கப்படுவது அரசியலினால்தான், என்னுடைய கலையினால் அல்ல. இதில் வேடிக்கையான முரண் என்னவெனில், ‘கலைக்கு எல்லைகள் கிடையாது, கலை அரசியலுக்கும் மேலானது’ என்றெல்லாம் நனி சொட்டச் சொட்ட பேசுகின்றனர். ஏன் அதை அவர்கள் கடைபிடிப்பதில்லை, கலையையும் கலைஞர்களையும் இத்தகைய மூடத்தனத்திலிருந்து விடுவியுங்கள்.

இப்போது நான் இந்தியக் குடிமகன், இந்த விருதுக்கு உரிமை உடையவன். அவர்கள் பாகிஸ்தானி என்கின்றனர், இது வேடிக்கையானது, சிரிப்புமூட்டக்கூடியது. அவர்களுக்கு கையிலெடுக்க எதுவும் இல்லை, அதனால் என் பாகிஸ்தான் பூர்வீகத்தைக் கையில் எடுக்கின்றனர்.

இவர்களெல்லாம் சிறியவர்கள், இதில் பலருக்கும் இவர்களின் மூத்த தலைவர்கள் மதிப்பு மிகுந்தவர்கள் என்பதைக் கூட அறியாதவர்கள். பாஜகவாக இருந்தாலும் காங்கிரசாக இருந்தாலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள், நான் அனைவருக்கும் நண்பன் தான். நான் இசைத்துறையைச் சேர்ந்தவன் நான் இசை மூலம் அன்பைப் பகிர்கிறேன்” என்றார் அத்னன் சமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x