மகாத்மா காந்தி நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா, அத்வானி, மன்மோகன்சிங் அஞ்சலி

மகாத்மா காந்தி நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா, அத்வானி, மன்மோகன்சிங் அஞ்சலி
Updated on
2 min read

புதுடெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மாவின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மூத்த தலைவர்கள் அத்வானி, மன்மோகன்சிங், சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

இதே நாளில் மகாத்மா காந்தி 1948 இல் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் தியாகத்தையும் சுதந்திரத்திற்காக உயிர்நீத்தவர்களையும் நினைவுகூரும் விதமாக இன்றைய தினம் தியாகிகள் தினமாகவும் போற்றப்படுகிறது.

புதுடெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரும் காந்திக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

அரசியல் தலைவர்களைத் தவிர, பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம். நாரவனே, கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், மற்றும் ஐ.ஏ.எஃப் தலைமை விமானப்படைத் தலைவர் மார்ஷல் ஆர்.கே.எஸ். படாரியாவும் அஞ்சலி செலுத்தினர்.

நிபந்தனையற்ற அன்பு

தியாகிகள் தினத்தில் மகாத்மா காந்திக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மரியாதை என்று குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறப்பட்டுள்ளதாவது:

''காந்திஜி தனது இறுதி தியாகத்தில், நமக்கு நிலையானதொரு நினைவை விட்டுச் சென்றுள்ளார்: அது நிபந்தனையற்ற அன்பு, குறிப்பாக மற்றவர்களிடத்தில். காந்திஜியின் உண்மையான செய்தியை நாம் கண்டடைவோம் என்று நான் நம்புகிறேன்.''

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி எனக் குறிப்பிட்டு பிரதமர் தனது ட்விட்டர் செய்தியில், ''பாபுவின் ஆளுமை, யோசனைகள் மற்றும் இலட்சியங்கள் ஒரு வலுவான, திறமையான மற்றும் வளமான புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப தொடர்ந்து நம்மைத் தூண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in