Last Updated : 30 Jan, 2020 12:50 PM

 

Published : 30 Jan 2020 12:50 PM
Last Updated : 30 Jan 2020 12:50 PM

உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் நகரங்களில் பெங்களூரு முதலிடம்; 10 நாட்களை டிராபிக்கிலே செலவிடுகிறார்கள்: மும்பைக்கு 4-வது இடம்

உலகிலேயே அதிகமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இந்த நகரில் உள்ள மக்கள் ஆண்டுக்கு 10 நாட்கள் 3 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலிலேயே கழிக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த மும்பை ஓரளவு தணிந்து 4-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இங்குள்ள மக்கள் 8 நாட்கள் 17 மணிநேரத்தைப் போக்குவரத்து நெரிசலிலேயே கழிக்கிறார்கள்

உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு செய்யும் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள டாம்டாம் டிராஃபிக் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பிருப்பதாவது:

''உலகிலேயே அதிகமான, மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் பெங்களூரு நகரம் முதலிடம் பெறுகிறது. இந்த நகரில் உள்ள மக்கள் போக்குவரத்து நெரிசலில் செலவிடும் நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக 71 சதவீதம் செலவிடுகிறார்கள். இங்குள்ள மக்கள் ஓராண்டில் 10 நாட்கள் 3 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலிலேயே செலவிடுகிறார்கள்.

உலகின் முதல் 5 போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் பெங்களூருக்கு அடுத்த இடத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரம் உள்ளது. இங்குள்ள மக்களும் போக்குவரத்து நெரிசலில் கூடுதலாக 71 சதவீதம் காத்திருக்கிறார்கள்.

அடுத்ததாக கொலம்பியாவின் போகோடா நகர மக்கள் 68 சதவீதம் கூடுதலாகவும், மும்பை நகர மக்கள் 65 சதவீதமும், புனே நகர மக்கள் 59 சதவீதம் கூடுதல் நேரத்தையும் போக்குவரத்து நெரிசலிலேயே செலவிடுகிறார்கள். இதில் முதல் முறையாக புனே நகரம் இடம் பெற்றுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிக்க உலகின் 57 நாடுகளில் 416 நகரங்களில் முதல் 5 இடங்களில் இந்தியாவின் பெங்களூரு, மும்பை, புனே ஆகிய 3 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

8-வது இடத்தில் டெல்லி நகரம் இடம் பெற்றுள்ளது. மும்பை நகர மக்கள் ஆண்டுக்கு 8 நாட்கள் 17 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலில் செலவிடுகிறார்கள். அதிலும் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகிய 3 நகரங்களில் மாலை 7 மணி முதல் 8 மணி வரை மோசமான போக்குவரத்து நெரிசல் இந்த 3 நகரங்களில் நிலவுகிறது.

டெல்லி நகர மக்கள் ஆண்டுக்கு 7 நாட்கள் 22 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலிலேயே செலவு செய்கிறார்கள். புனே நகர மக்கள் ஆண்டுக்கு 8 நாட்கள் 3 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலிலேயே செலவிடுகிறார்கள்.

டெல்லி போக்குவரத்து நெரிசல்

ஐரோப்பிய நகரங்களில் அதிகமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் இஸ்தான்புல் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து கிவ், புசாரெஸ்ட், பீட்டர்ஸ் பர்க் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

அமெரிக்காவில் அதிகமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து நியூயார்க் நகரமும், சான் பிரான்சிஸ்கோ, சான் ஜோஸ் மற்றும் சீட்டல் நகரங்களும் இடம் பெற்றுள்ளன.

உலக அளவில் கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும், 2019-ம் ஆண்டு போக்குவரத்து நெரிசல் 239 நகரங்களில் 57 சதவீதம் அதிகரித்துவிட்டது. அதேசமயம், 63 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கிறது என்பதும் மகிழ்ச்சிக்குரியதாகும்.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பது என்பது ஒருவகையில் வலிமையான பொருளாதாரத்தைக் குறிக்கிறது. உலக அளவில் கணக்கிட்டால் போக்குவரத்து நெரிசல் என்பது சராசரியாக 29 சதவீதமாக இருக்கிறது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x