

மகாராஷ்டிரா மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜிதேந்திர ஆவாத் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, எமெர்ஜென்சி மூலம் ஜனநாயகத்தை அச்சுறுத்தினார் என்று பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா பீட் நகரத்தில் ‘சன்விதான் பச்சாவ் சங்கர்ஷ் சமிதி’ ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்திரா காந்தி எமெர்ஜென்சியைக் கொண்டு வந்து ஜனநாயகத்தை அச்சுறுத்தினார். அப்போது யாரும் வெளிப்படையாக எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் அகமதாபாத், பாட்னாவிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின, மக்கள் சக்தியினால் இந்திரா தோற்கடிக்கப்பட்டார்.
எப்போது, எங்கு ஹிட்லர் தோன்றினாலும் அறிவாளிகளையும் மாணவர்களையும் கண்டு அஞ்சுவார்கள் காரணம் இவர்கள் போராளிகள். இதனால்தான் ஜே.என்.யு மற்றும் பிற பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் தாக்கப்படுகின்றனர்.
இந்திய அரசமைப்புச் சாசனத்துக்கு எழுந்துள்ள தற்போதைய அச்சுறுத்தலுக்கு எதிராக போதிய அளவில் மாணவர்கள் எழுச்சி பெறவில்லை, ஆனால் எதிர்காலத்தில் நிச்சயம் எண்ணிக்கை அதிகரிக்கும்.
முஸ்லிம், இந்து அல்ல, நம் அரசியல் சாசனமே அபாயத்தில் இருக்கிறது. பாஜக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஒரு கையில் மூவர்ண தேசியக் கொடியையும் இன்னொரு கையில் அரசியல் சாசனத்தின் நகலையும் தூக்கிப் பிடியுங்கள், இந்தச் சதியை எதிர்த்துப் போராடுங்கள்.” என்று சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தை வலியுறுத்திப் பேசினார்.
சமீபத்தில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத் மும்பையின் முன்னாள் தாதா கரீல் லாலாவை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அடிக்கடி சந்திப்பார் என்று கூறியது சர்ச்சையாக ராவது தன் கூற்றை வாபஸ் பெற்றார்.