

குடியுரிமை சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகம் அருகே நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக 70 பேரின் புகைப்படங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.
சிஏஏ-வுக்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே கடந்த டிசம்பர் 15-ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸார் நுழைந்து தடியடி நடத்தியதில் அவ்வளாகம் போர்க்களமாக மாறியது.
பல்கலைக்கழகம் அருகே நடந்த வன்முறை தொடர்பாக வெவ்வேறு காவல் நிலையத்தில் 2 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், பொது சொத்துகளை சேதப்படுத்துதல், தீவைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக 70 பேரின் புகைப்படங்களை போலீஸார் நேற்று வெளியிட்டனர். இவர்களை அறிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் என போலீஸார் கூறியுள்ளனர். இதற்காக 2 தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர்.